Last Updated : 15 Jul, 2021 03:13 AM

 

Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

நகைச்சுவை வசனங்களுடனான வீடியோக்கள்- யூடியூப்பில் கலக்கும் 7 வயது கோவை சிறுவன்

கோவை

தற்போதைய நவீன உலகில் எந்த ஒரு முக்கிய நிகழ்வும், சமூக வலைதளங்கள் என்ற சமுத்திரத்தில் நுழைந்து, அடுத்த சில நிமிடங்களில் மக்களிடம் பேசும் பொருளாகிறது. அதில் தொடர்புடையவர்களை புகழின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது. தற்போது சமூகவலைதளத்தில் ‘டிரண்ட்’ ஆகவும், பேசு பொருளாகவும் ஆகியிருக்கிறது, செய்தியாளர்களை மையப்படுத்தி கோவையைச் சேர்ந்த சிறுவன் ரித்விக் யூ டியூப்பில் வெளியிட்ட ‘ரித்விக் நியூஸ்’ வீடியோ.

ஏறத்தாழ 10 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ, அடுத்தவர்களை காயப்படுத்தாமல், நகைச்சுவை உணர்வுடன், யதார்த்த வார்த்தைகளில், பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘தொலைக்காட்சி’ செய்தியாளர்களை ட்ரோல் செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வீடியோவில் நடித்த சிறுவன் ரித்விக்(7), துடியலூர் அருகேயுள்ள வடமதுரையைச் சேர்ந்த ஜோதிராஜ் - ஆஷா தம்பதியரின் மகன். ரித்விக் தற்போது 2-ம் வகுப்பு படிக்கிறார். இது தொடர்பாக சிறுவன் ரித்விக் கூறும்போது, ‘‘நான் நடிக்கும் வீடியோவுக்கான கதையை அப்பா எழுதுவார். கேரக்டர்களுக்கான உடை, ஒப்பனையை அம்மா செய்து தருவார். ஷூட்டிங் நேரத்தில் அப்பா கூறும் வசனத்தை சிலமுறை பேசி மனதில் ஏற்றிக் கொண்டு, பேசி விடுவேன். சில கேரக்டர்களின் வசனங்கள் ரீடேக் எடுக்கப்படும். தினமும் எனக்கு ஆன்லைன் வகுப்பு உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பிறகு, ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன். அதிகபட்சம் வாரத்தில் ஒருநாள் ஷூட்டிங் எடுக்கப்படும். ஒரு பிரதான கேரக்டர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சில கேரக்டர்கள் ஆகியவற்றை மையப்படுத்தி, எனது கதைகள் உருவாக்கப்படுகின்றன. அப்பா கதை எழுதுவதோடு, வீடியோ எடுப்பது, அதை எடிட்டிங் செய்வது, இசை சேர்ப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு, குறும்படம் போல் தயாரிப்பார். நாங்கள் எங்களது யூடியூப் சேனலில் அதை வெளியிடுவோம். எனக்கு விண்வெளி வீரர் ஆவதே லட்சியம்’’ என்றார்.

சிறுவன் ரித்விக்கின் தந்தை ஜோதிராஜ் கூறும்போது, ‘‘நான், மனைவி, மகன் இணைந்து 2017-ல் ரித்விக் பெயரில் யூடியூப் சேனல் தொடங்கினோம். கரோனா முழு ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபோது, நகைக்சுவை வீடியோக்களை உருவாக்கி, நமது யூடியூப் சேனலில் பதிவேற்றலாம் என மகன் ரித்விக் யோசனை கூறினார். இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வீடியோக்களை தயாரித்தோம். நகைச்சுவையுடன் கூடிய கான்செப்ட்டை வைத்து வீடியோ தயாரிக்கும் பணியைத் தொடங்கினோம்.

நகைச்சுவையுடன் கூடிய அப்பா - மகன் உரையாடல் தொடர்பான முதல் வீடியோவை வெளியிட்டோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின்னர், கிராமத்து மற்றும் நகரத்து இளைஞர்கள் பேசிக் கொள்வது, தையல் கடைக்காரர் எதிர்கொள்ளும் நிகழ்வுகள், வீடுகளில் பேய் விரட்ட வருபவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள், ரோபோவுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள், கார்ப்பரேட் அலுவலகத்தில் நடக்கும் நேர்காணல் உள்ளிட்ட 8 வீடியோக்களை இதுவரை வெளியிட்டுள்ளோம். இதில் கடைசியாக கடந்த வாரம் வெளியிட்ட ‘ரித்விக் நியூஸ்’ வீடியோ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வீடியோவில் செய்தியாளர், செய்தி அரங்கத்தில் உள்ள பெண் நெறியாளர், விவசாயி, இளைஞர் என வெவ்வேறு ரோல்களை நகைச்சுவை வசனத்துடன் ரித்விக் செய்துள்ளார். எல்லா கேரக்டர்களையும் ரித்விக்கே செய்துள்ளார். சினிமா உதவி இயக்குநரான நான், கதை, வசனம், தயாரிப்பு, இசை, வெளியீடு போன்றவற்றை பார்த்துக் கொள்கிறேன்.

ஷூட்டிங் உதவி, ரித்விக் கேரக்டர்களுக்கு தகுந்த உடைகள், ஒப்பனைகள் போன்றவற்றை என் மனைவி பார்த்துக் கொள்கிறார். நாங்கள் மூவரும் இணைந்து இந்த வீடியோக்களை உருவாக்கி வருகிறோம். கடைசியாக வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டு, திரைப் பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x