Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

அறநிலையத் துறை சார்பில் 100 கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வேளச்சேரி ராம் நகரில் சிறிதளவு பூமிக்குள் புதைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான வாசுதேவ பெருமாள் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துறை ஆணையர் குமரகுருபரன், மண்டல இணை ஆணையர் ரேணுகா தேவி ஆகியோர் உடனிருந்தனர். படம் : பு.க.பிரவீன்

சென்னை

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நேற்று சென்னை வேளச்சேரியில் உள்ள வாசுதேவ பெருமாள் கோயில், யோகநரசிம்மர் கோயில், தண்டீஸ்வரர் கோயில் மற்றும் கே.கே.நகர் சக்திவிநாயகர் கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, வாசுதேவ பெருமாள் கோயில் பூமிக்குள் சிறிதளவு புதைந்துள்ளது என்பதால் அதை மீட்கவும், வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளவும், கோயில் சொத்துகளை கண்டுபிடிக்கவும், புதுப்பிக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘‘தமிழகம் முழுவதும் கோயில்களில் ஆகம விதிகளின்படி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோயில் சொத்துகளை மீட்டு, வருவாயை பெருக்கவும் ஆய்வு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 100 கோயில்கள் திருப்பணிக்கு முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். அதன்படி உடனடியாக திருப்பணி மேற்கொள்ளப்பட வேண்டிய கோயில்களின் விவரம் பட்டியலிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளன. சிலைகள் பாதுகாப்பு, களவு போன சிலைகள் மீட்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆய்வின்போது தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x