Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம், தாம்பரம்- வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் பணிகளை செயல்படுத்துங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்தில் மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம், தாம்பரம்- வேளச்சேரி வழித்தடப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதைத் தொடர்ந்து, துறைகள் வாரியாக செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று வருவாய், சிறப்பு முயற்சிகள் துறைகள் தொடர்பானஆய்வுக்கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றன.

வருவாய்த் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவுகள் வருமாறு:

தாமதமின்றி மக்களின் கோரிக்கைகளை தீர்த்துவைக்க வேண்டும். ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையால் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இணையம் வாயிலாக துரிதமாக துறை சார்ந்த சான்றிதழ்களை வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை நிர்வாக அமைப்பை வலுப்படுத்துவதுடன், மாநில நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை தினசரி கண்காணித்து, வடிநிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகளை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் நிகழ்நேர வெள்ள முன்கணிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

பேரிடர் காலங்களில் பொதுமக்களின் உயிர், உடைமைகள், கால்நடைகளுக்கு ஏற்படும் சேதங்களை தவிர்க்க புதிய முன்னெடுப்பு மூலம் உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களின் தேவை உள்ளவர்கள், அதை வழங்க தயாராக உள்ள ஆர்வலர்களை இணைக்கும் வகையில் இணையவழி அமைப்பு உருவாக்க வேண்டும்.

தொடர்ந்து, சிறப்பு முயற்சிகள் துறை ஆய்வுக்கூட்டத்தில், முதல்வர் பேசும்போது, “உலகத்தரத்துக்கு இணையான பாதுகாப்புடன் விரைவாக பயணிக்கும் வகையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல் கட்ட நீட்டிப்பில் அறிவிக்கப்பட்ட, மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடம் மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடப்பணிகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செலயர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, சிறப்பு முயற்சிகள் துறை செயலர் விபு நய்யர், மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் பிரதீப் யாதவ், வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x