

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து, மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் அந்த நாளில் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர்.
இத்தினத்தை நினைவு கூறும்வகையில் பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ம் தேதி பேரணி, தீப்பந்த ஊர்வலம் நடத்துவதுண்டு. கரோனா காரணமாக புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற இருந்த மின்விளக்கு ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரெஞ்சு தேசிய தின விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி பிரெஞ்ச் துணைத் தூதர் லிசே டல்போட் பரே,துணை மாவட்ட ஆட்சியர் (தலைமையகம்) முரளிதரன் ஆகியோர் போர் வீரர் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இந்தியா - பிரான்ஸ் இரு நாட்டு கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதங்கள் இசைக் கப்பட்டன.
கரோனா காரணமாக இதில் பிரெஞ்ச் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், யாரும் பங்கேற்கவில்லை ஒரு சிலர் மட்டுமே அனு மதிக்கப்பட்டனர்.