

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சென்னை - கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவில்பட்டியில் நூற்பாலைகள், கல்வி நிறுவனங்கள், தீப்பெட்டி ஆலைகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் ஆகியவை உள்ளன. மதுரை ரயில்வே கோட்டத்தில் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் ரயில் நிலையமாக கோவில்பட்டி உள்ளது. ‘ஏ’ கிரேடு அந்தஸ்தில் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கரோனா ஊரடங்குக்கு பின்னர்,முழுமையாக ரயில்கள் இயக்கப்படவில்லை. ஆனால், இயக்கப்படும் ரயில்களில் பெரும்பாலானவை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை.
நெல்லை - ஈரோடு - மயிலாடுதுறை பகல் நேர பயணிகள் ரயில்,சென்னை - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், வாரம் இருமுறை இயங்கும் நிஜாமுதீன் டெல்லி - கன்னியாகுமரி விரைவு ரயில், பிரதி வெள்ளி இயங்கும் நாகர்கோவில் - சென்னை அதிவிரைவு ரயில், பாலூர் - மதுரை தினசரி இரவு நேரரயில், தினசரி இயங்கும் நாகர்கோவில் - கோவை இரவு நேர விரைவு ரயில் (இரு மார்க்கம்), சனிக்கிழமை இயங்கும் தாதர் - நெல்லை விரைவு ரயில், ஞாயிறு இயங்கும் ஒகா - தூத்துக்குடி விரைவு ரயில் ஆகியவை நிற்காமல் செல்கின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, மதுரை ரயில்வே கோட்ட முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறும்போது, “மதுரை ரயில்வே கோட்டத்தில், மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக, வருவாயில் 3-வது இடத்தில் கோவில்பட்டி இருக்கிறது. கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் போன்ற தாலுகா பொதுமக்கள் கோவில்பட்டி ரயில் நிலையம் மூலம் வெளியூர் செல்கின்றனர். இங்கு அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கைஎடுக்க வேண்டும்.அதேபோல்,கோவில்பட்டி ரயில் நிலையவாயிலில் வாகனங்கள் நிறுத்துவது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை கெடுபிடி காட்டுகிறது. இதனை கைவிட வேண்டும்,” என்றார்.
கோவில்பட்டியில் நூற்பாலைகள், கல்வி நிறுவனங்கள், தீப்பெட்டி ஆலைகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் ஆகியவை உள்ளன. மதுரை ரயில்வே கோட்டத்தில் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் ரயில் நிலையமாக கோவில்பட்டி உள்ளது. ‘ஏ’ கிரேடு அந்தஸ்தில் செயல்பட்டு வருகிறது.