

கரோனா பரவலைத் தடுக்க சட்டப்பேரவையில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகியுள்ளது. எனினும் அமைச்சர்கள் அறைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
புதுச்சேரியில் புதிய அரசு பொறுப்பேற்று, அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் அவர்களை சந்திக்க மக்கள் கூட்டம் பேரவையில் அதிகளவில் அலைமோதுகிறது. கரோனா காலம் என்ற சூழலிலும் மக்கள் சமூக இடைவெளியின்றி கூடுவதால் அங்கு பணிபுரிவோர் அச்சத்தில் ஆழ்ந்தார்கள்.
பேரவையினுள் மக்கள் அதிகளவு வந்து குவியத்தொடங்கியதால் பேரவை செயலகம் புதிய நடைமுறைகளை இன்று முதல் தொடங்கியுள்ளது.
அதன்படி பேரவையினுள் அமைச்சர்கள் இருக்கும்போது மட்டுமே அவர்களைப் பார்க்க பார்வையாளர்கள் அனுமதிப்பது என்று முடிவு எடுத்துள்ளனர்.
அமைச்சர்களைக் காண வரும் குழுவில் ஓரிருவர் மட்டுமே சென்று சந்திக்க பேரவைக்குள் அனுமதிக்கப்படும் முறை இன்று நடைமுறைக்கு வந்தது. அத்துடன் அவர்கள் விவரங்களை நோட்டில் எழுதி வைத்து கொண்டே பேரவைக்குள் அனுமதிக்கின்றனர்.
இதனால் இன்று காலை பேரவையில் மக்கள் கூட்டம் கட்டுக்குள் இருந்தது. ஆனால், அமைச்சர்கள் வருவதை அறிந்து பலரும் பிற்பகலில் சந்திக்க குவிந்தனர். இதனால் அமைச்சர்கள் அறையில் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது.