Last Updated : 14 Jul, 2021 05:57 PM

 

Published : 14 Jul 2021 05:57 PM
Last Updated : 14 Jul 2021 05:57 PM

இளைஞர்களை உதாசீனப்படுத்தியதால் தேர்தலில் தோல்வி: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேதனை

திருப்பத்தூர்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் இளைஞர்களை உதாசீனப்படுத்தியதால் வெற்றி வாய்ப்பை இழந்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேதனை தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்களில் அதிமுக செயல்வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

நாட்றாம்பள்ளி ஒன்றியம், ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் சாம்ராஜ் தலைமை வகித்தார். வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

‘‘நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நான் 30 முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனத் தேர்தலுக்கு முன்பு கணிக்கப்பட்டது.

ஒருசில பகுதிகளில் இரட்டை இலைக்குச் சாதகமாக வாக்குகள் பதிவானாலும், கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அதிமுக நிர்வாகிகள் இளைஞர்களை உதாசீனப்படுத்தியதால் கடந்த தேர்தலில் நாம் தோல்வியைச் சந்தித்துள்ளோம்.

ஜோலார்பேட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் யாரென்றே மக்களுக்குத் தெரியாது. இளைஞர்களை அரவணைத்துச் செல்லாததால், அவர்கள் வாக்குகள் அனைத்தும் சீமான் கட்சிக்குச் சென்றது. நமக்குக் கிடைக்க வேண்டிய 13 ஆயிரம் வாக்குகள் சீமான் கட்சிக்குச் சென்றன. இதற்கு அதிமுக கிளை நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகளே காரணம்.

மக்கள் என்னைத் தோற்கடிக்கவில்லை, அதிமுக கட்சி நிர்வாகிகளால் நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன் என்பது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி திமுகவினர் ஆட்சிக்கு வந்துவிட்டனர். ஆனால், விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு, பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிய அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இது நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதைக் காட்டுகிறது.

எப்படியும் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று நம்மிடம் இருந்த அலட்சியமே தோல்விக்கு மிக முக்கியக் காரணம். எனவே, இனிவரும் காலங்களில் நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறக் கட்சி நிர்வாகிகள் முழுமையாகப் பாடுபட வேண்டும். பூத் வாரியாக மக்களைத் தேடிச்சென்று அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் இழந்த வெற்றியை உள்ளாட்சித் தேர்தலில் மீட்டெடுப்போம். அதற்கான பணிகளைக் கட்சி நிர்வாகிகள் உடனடியாகத் தொடங்க வேண்டும். உங்களுக்கான ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்களை நீங்களே தேர்வு செய்து, அவர்களை வெற்றிபெறச் செய்யக் கடுமையாக உழைக்க வேண்டும்’’.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்டப் பொருளாளர் ராஜா, அவைத் தலைவர் ராஜேந்திரன், மகளிர் அணிச் செயலாளர் மஞ்சுளா கந்தன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x