இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

குடியுரிமைக்காக மதுரையில் போராட்டம் நடத்திய இலங்கை அகதிகள் முகாமில் வாழும் மக்கள். | கோப்புப் படம்.
குடியுரிமைக்காக மதுரையில் போராட்டம் நடத்திய இலங்கை அகதிகள் முகாமில் வாழும் மக்கள். | கோப்புப் படம்.
Updated on
1 min read

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 2019-ல் குடியுரிமை சான்று கேட்டு அளித்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர், தங்களை இலங்கை அகதியாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாகக் கருதி இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் கடந்த 2009-ல் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியர்கள் தாமதப்படுத்தாமல் விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு 16 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என 2019 ஜூன் 17-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நிறைவேற்றாததால் மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்தன் ஷெர்ங்ளா, உள்துறை அமைச்சர் அஜய்குமார்பல்லா, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்பிரமணியம் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில், மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு அளித்த விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஹென்றிடிபேன், ஆர்.கருணாநிதி வாதிட்டனர்.

பின்னர் நீதிபதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அனுப்பிய விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். தவறினால் மத்திய அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்படும் என உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in