

கரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க, கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி, பொதுமக்கள், அரசியல் கட்சிகள் உதவ வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நலவாழ்வு மையக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டி:
“தமிழ்நாட்டில் கரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் பெருமளவில் தேவைப்பட்டது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி பல்வேறு அமைப்புகள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகின்றன.
சென்னையில் டெங்கு பாதித்தவர்கள் நலமுடன் உள்ளனர். டெங்குவைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைச் சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. நீட் தேர்வு தொடர்பாக, நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் 86 ஆயிரம் பேரின் கருத்துகளைக் கேட்டறிந்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். எனவே இது தொடர்பாகச் சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்.
கரோனா இறப்பு குறித்து மறைக்கவேண்டிய அவசியம் அரசுக்குக் கிடையாது. அதேபோல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கும்போது, அரசியல் கட்சிகளும் அதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஏற்கெனவே கடந்த தேர்தலின்போதுதான் கரோனா இரண்டாவது அலை அதிகமாகப் பரவியதற்கு அரசியல் கட்சிகள் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே அதைக் கருத்தில் கொண்டு மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்படக் கூடாது.
வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்களில் விதியை மீறிக் கூடுதல் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மூலமாகத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவை அனைத்துமே மூன்றாம் அலை நுழையாமல் எடுக்கப்படும் நடவடிக்கையே. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா இன்னும் முடியவில்லை. விதிமுறைகளைப் பின்பற்றாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று மதியம் நான் டெல்லி செல்கிறேன். அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திக்க உள்ளேன். அப்போது, தடுப்பூசியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும், எச்.எல்.எல் தடுப்பூசி மையத்தை (செங்கல்பட்டு தடுப்பூசி மையம்) உடனடியாகத் திறக்க வேண்டும், இதனால் இப்போதுள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்க உதவியாக இருக்கும் என்கிற அடிப்படையில் வலியுறுத்துவோம்.
மொத்தம் 13 கோரிக்கைகளை வைக்க உள்ளோம். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி திறப்பு, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டிய அந்த அவசியத்தையும் எடுத்துச் சொல்லவுள்ளோம்”
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.