Published : 14 Jul 2021 05:09 PM
Last Updated : 14 Jul 2021 05:09 PM

திண்டிவனம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சுற்றுலா மாளிகை: அமைச்சர் எ.வ.வேலு

திண்டிவனம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சுற்றுலா மாளிகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இன்று (ஜூலை 14) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறைப் பணிகள் தொடர்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

"காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் உள்ள முடிவுற்ற பணிகள், முன்னேற்றத்தில் உள்ள பணிகள், மீதமுள்ள பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், ஒப்பந்தச் செயலாக்கம் மற்றும் பரிசீலனையில் உள்ள பணிகள், ஒப்பந்தப்புள்ளி அழைக்கப்படவுள்ள பணிகள், நில எடுப்புப் பணிகள், மதிப்பீடு நிலையில் உள்ள பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

முதல்வர் தமிழகம் முழுவதும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, கூட்ட நெரிசல் உள்ள நகர்ப் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

என்.ஹெச் 45 என்று சொல்லக்கூடிய திண்டிவனத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான நெடுஞ்சாலையில் சிறப்பு விருந்தினர்கள், மாநிலத்தில் இருக்கின்ற அதிகாரிகள் பயணிக்கிறார்கள். அவ்வாறு பயணிக்கக்கூடிய இடத்தில் சுற்றுலா மாளிகை தேவை என்ற கருத்து உள்ளது. அதனை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று அப்பகுதியில் சுற்றுலா மாளிகை அமைப்பதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஊராட்சி ஒன்றியச் சாலைகள், ஊராட்சி சாலைகள் என இரண்டு வகை உள்ளன. இந்த இரண்டு வகையும் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சம்பந்தம் இல்லை. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் ஒன்றியத்துக்கு சம்பந்தப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் மூலமாகக் கணக்கில் எடுத்த சுமார் 10,000 கிலோ மீட்டர் சாலைகளை ஐந்தாண்டுகளுக்குள் பகுதி, பகுதியாக அந்தச் சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அச்சாலைகளை நபார்டு திட்டத்தின் கீழ் கிராம சாலைகள் அமைக்க செய்ய வேண்டிய முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மாநிலத் தலைநகரை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சாலைகள்தான் தலைநகர் சென்னை செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால், மூன்று மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பணிகள் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளோம்.

எனவே, இந்தக் குறைகள் எல்லாம் கட்டாயம் கூடிய விரைவில் விரைந்து செயல்பட்டு நிறைவேற்றுவோம்".

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x