திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்?- அமைச்சர் சாமிநாதன் பேட்டி

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்?- அமைச்சர் சாமிநாதன் பேட்டி
Updated on
1 min read

கரோனா மூன்றாவது அலை அச்சம் இருப்பதால் திரையரங்குகளைத் திறப்பது குறித்து ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் கரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால், கரோனா 2-வது அலை பரவத் தொடங்கியதும் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது தொற்றுப் பரவல் குறைந்து, படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திரையரங்குகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையே சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் பேசும்போது, ''ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு துணை நிற்கும்.

திரையரங்குகள் திறப்பு குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது. தமிழக முதல்வர், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைத்துள்ளார். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று, பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய கோரிக்கைகளை ஏற்று, ஆழ்ந்து பரிசீலித்துதான் முடிவெடுக்க வேண்டும்.

நாம் எடுக்கக்கூடிய முடிவால் மீண்டும் கரோனா தொற்று பரவிவிடாத சூழலில்தான் திரையரங்குகளைத் திறக்க முடியும். ஏற்கெனவே மத்திய அரசும் உலக சுகாதார மையமும் மருத்துவ நிபுணர்களும் மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். கொங்குநாடு விவகாரம் குறித்து முதல்வர் கருத்து தெரிவிப்பார்'' என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in