Published : 27 Feb 2016 10:11 PM
Last Updated : 27 Feb 2016 10:11 PM

நாங்கள் படிக்கச் சொல்கிறோம்; ஜெயலலிதா குடிக்கச் சொல்கிறார்- குரு குற்றச்சாட்டு

நாங்கள் படிக்கச் சொல்கிறோம். ஜெயலலிதா குடிக்கச் சொல்கிறார் என்று அதிமுக மீது பாமக எம்எல்ஏ குரு குற்றம்சாட்டினார்.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள விஜிபி திடலில் பாமக மாநில மாநாடு நடந்தது. இதில் ஜெயம்கொண்டம் தொகுதி பாமக எம்எல்ஏ குரு பேசியதாவது:

இன்று (சனிக்கிழமை) மாலை ஆறு மணிக்கு பாமக கொடியேறும்போது சூரியன் மறைந்துவிட்டது.திராவிடக் கட்சிகளால் தமிழ்நாடு நாசமாக்கப்பட்டது.

பாமக சாதிக்கட்சி என்று விமர்சிக்கிறார்கள். உதாரணத்துக்கு சொல்கிறோம் காந்திக்குப் பிறகு எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டேன். நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ என் கால்கள் படாது என்று அயராது உழைப்பவர் ராமதாஸ்.

தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் நடந்த போது அங்கு சென்று அமைதிப்படுத்தியவர் ராமதாஸ். தீண்டாமை ஒழிய வேண்டுமென்று கிராமங்களுக்குச் சென்றவர் ராமதாஸ். மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு போராடி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் ராமதாஸ்.

கருணாநிதி 'காங்கிரஸ் கட்சி பணக்காரர்களின் கட்சி. பண்ணையார்களின் கட்சி. காகிதப் பூ மணக்காது. காங்கிரஸ் சோஷலிசம் இனிக்காது' என்று சொன்னார். வறுமையை ஒழிப்போம். மாற்றத்தை உருவாக்குவோம் என்று கருணாநிதி சொன்னார்.

அடைந்தால் திராவிட நாடு. இல்லையேல் சுடுகாடு என்று அடுக்குமொழியில் பேசிய திராவிட இயக்கத் தலைவர்கள் வறுமையை விரட்டினார்களா? வாட்டத்தைப் போக்கினார்களா?உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் கிடைத்ததா?குடியைக் கொடுத்து குடிகார மக்களை உருவாக்கியதுதானே உங்கள் சாதனை?

பாமக ஆட்சிக்கு வந்தால் இலவசமாக தொலைக்காட்சி, ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர் தரமாட்டோம். இலவசக் கல்வி தருவோம். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்.

கல்விக்கூடங்களை தனியாருக்கு கொடுத்துவிட்டு, தனியார் நடத்த வேண்டிய சாராயக் கடையை அரசு நடத்துகிறது. இதை விட என்ன கேவலம் இருக்கிறது?

அதிமுகவின் ஆட்சி ஓராண்டு சாதனையை நூறாண்டு சாதனை என்று சொன்னார்கள். ஐந்தாண்டு சாதனை இட்லி விற்றதா? இதுவா சாதனை?

ராமதாஸ் என்ன சொல்கிறார். எல்லோரும் நன்றாக படித்து டாக்டர், இன்ஜினீயர், கலெக்டரா வாங்க என்று சொல்கிறார்.

ஜெயலலிதா குடிக்கச் சொல்கிறார். நாங்கள் படிக்கச் சொல்கிறோம். உங்களுக்கு எது வேண்டும்?

'என்னுடைய ஓட்டு விற்பதற்கல்ல; பணம் கொடுத்து ஓட்டு வாங்க மாட்டோம்' என்று ராமதாஸ் சொல்கிறார். இப்படி சொல்ல ஜெயலலிதாவும், கருணாநிதியும் தயாராக இருக்கிறார்களா?

ஒரு பைசா கூட கொடுக்காமல் ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகள் சாதனைகளைச் சொல்லி ஓட்டு வாங்க முடியுமா?

வாரிசு அரசியல் பற்றிப் பேசுகிறார்கள். அலெக்சாண்டரிடம் தன் தந்தை சொன்னார். இந்தியாவிற்கு நீ செல்ல வேண்டும். வெல்ல வேண்டும் என்றார். தந்தையின் ஆசையை நிறைவேற்ற அலெக்சாண்டர் படையெடுத்து இந்தியாவை வென்றார்.

தமிழகத்தில் நல்லாட்சி தரவே அன்புமணியை முதல்வராக்க நினைக்கிறார் ராமதாஸ்'' என்று குரு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x