Published : 14 Jul 2021 02:56 PM
Last Updated : 14 Jul 2021 02:56 PM

ஆசிரியர் தகுதித் தேர்வு; தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என ஆணையிடுக: ஓபிஎஸ்

ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற ஆணையை வெளியிட வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூலை 14) வெளியிட்ட அறிக்கை:

"ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு உத்தரவிட்டும், அதற்கான சான்றிதழை மாநில அரசு வழங்காமல் தாமதப்படுத்துவதன் காரணமாக, பள்ளிகளில் பணிக்குச் சேர முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வி மற்றும் ஆசிரியர்களின் கல்வித் தகுதியில் பல்வேறு விதிகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் ஒன்றாக, அனைத்து மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்வுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது என்றும், அதற்குள் பணிக்குச் சேராதவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதியும் இருந்தது.

இதன் காரணமாக, ஏழு ஆண்டுகளாக ஆசிரியர் பணி கிடைக்காதவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், கோவிட்-19 தொற்று நோய் காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழைச் செல்லத்தக்கதாக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்றும், 2011-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பொருந்தும் வகையில் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுரை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவு, ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்றும், இதுகுறித்து புதிய சான்றிதழ் எதுவும் வழங்கப்படாது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கை வெளியிட்டு விட்டதாகவும், ஆனால், இதுகுறித்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை எவ்விதமான ஆணையையும் வெளியிடவில்லை என்றும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் சேர முடியாமல் தவிக்கிறார்கள் என்றும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்து ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள சூழ்நிலையில், தமிழக அரசின் சார்பில் அரசாணை எதுவும் வெளியிடப்படாதது வருத்தத்தை அளிக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற ஆணையை வெளியிட்டு, அவர்கள் பணிகளில் சேர ஆவன செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x