Published : 14 Jul 2021 01:25 PM
Last Updated : 14 Jul 2021 01:25 PM

‘80 ஆண்டுகள் பொது வாழ்வில் தடம் பதித்த இரும்பு மனிதர்’: என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளுக்கு வைகோ வாழ்த்து

“பொதுவுடைமைப் பூங்காவில் பூத்த புரட்சி மலர் என்.சங்கரய்யா ஜூலை 15இல் நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கின்றார். தன் வாழ்வையே போராட்டக் கள வேள்வியாக ஆக்கிக் கொண்டு 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்வில் தடம் பதித்த ‘இரும்பு மனிதர்’ சங்கரய்யா நூற்றாண்டின் நுழைவாயிலில் இருப்பது நம்மைப் பெருமகிழ்ச்சி அடையச் செய்கிறது” என வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

“இந்த நாட்டுக்கு எங்கள் தெற்குச் சீமை கொடையளித்த தலைவர்களைப் போலவே என்.சங்கரய்யாவும் வீர தீரமிக்க தலைவராகத் திகழ்ந்தார். 1922, ஜூலை 15இல் கோவில்பட்டியில் பிறந்து அங்கேயே பள்ளிக் கல்வியை முடித்தார். மதுரையில் புகழ் வாய்ந்த அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வரலாற்று மாணவராகச் சேர்ந்தார். கல்லூரி மாணவராக இருந்தபோதுதான் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆகி, தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் செயலாளர் பொறுப்பையும் ஏற்றார்.

இந்தித் திணிப்புக்கு எதிராகத் தந்தை பெரியாரும், தமிழறிஞர்களும் முதல் இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டபோது, மதுரையில் முதல்வர் ராஜாஜிக்குக் கருப்புக் கொடி காட்டிய போராட்டத்தில் சங்கரய்யாவும் பங்கேற்றார். அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ., இறுதித் தேர்வு எழுத இருந்த 15 நாட்களில் சங்கரய்யா பிரிட்டிஷ் அரசால் 1941இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தபோது, நெல்லையில் பல்வேறு கல்லூரி மாணவர்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தினார். காவல்துறையின் தடியடித் தாக்குதலில் காயமடைந்த நிலையில் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலூர் சிறையில் காமராஜர், நீலம் சஞ்சீவிரெட்டி, ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் என். சங்கரய்யாவின் சிறை சகாக்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1946இல் பம்பாய் கடற்படை எழுச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தது.

இதனையொட்டி மதுரையில் நடந்த பேரணிக்கு சங்கரய்யா தலைமை வகித்தார். அந்தப் பேரணியைத் தடுக்க முயன்ற காவல்துறை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபோதும், அஞ்சாமல் பேரணியை நடத்திச் சென்ற தீரம் கொண்ட வரலாறு கொண்டவர்.

அதே ஆண்டில் (1946) மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.சி.ஜோஷி, தமிழ்நாட்டுத் தலைவர் பி.ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் கலந்துகொண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதனால் பிரிட்டிஷ் அரசு மதுரை சதி வழக்கு புனைந்து பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்து சிறையில் பூட்டியது. அவர்கள் இந்தியா விடுதலை பெறுவதற்கு முதல் நாளில்தான் அதாவது ஆகஸ்ட் 14, 1947 இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டச் செயலாளர், அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர், தலைவர் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயலாற்றினார்.

இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பிளவுபட்டு 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலர்ந்தபோது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். சி.பி.எம். கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு தலைவர்களில் ஒருவர் தோழர் சங்கரய்யா, மற்றொருவர் தோழர் அச்சுதானந்தன்.

விடுதலைப் போராட்டத்திலும், பொதுவுடைமை இயக்கப் போராட்டங்களிலும் ஈடுபட்டு எட்டு ஆண்டுகள் சிறையேகிய தோழர் என்.சங்கரய்யா, மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை மிக்க பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கியது மட்டுமின்றி களப் பணிகளிலும் நிகரற்றவர் என்று பெயர் பெற்றார். ‘ஜனசக்தி’ ஏட்டின் பொறுப்பாசிரியர், ‘தீக்கதிர்’ நாளேட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசிரியர் என்ற பெருமையும் தோழர் என்.சங்கரய்யாவுக்கு உண்டு.

தமிழ் இலக்கியங்களிலும் தோய்ந்து, சொற்பொழிவுகளில் அவற்றை வெளிப்படுத்தியவர். மூன்று முறை சட்டமன்றத்தில் இடம்பெற்று சிறப்பாகச் செயல்பட்டார். என்.சங்கரய்யா லட்சியப் பிடிப்பும் கொள்கை உறுதியும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய பண்பு நலன்கள் ஆகும்.

வாழும் பொதுவுடைமைப் புரட்சியாளர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கடந்தும் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டுகள் வாழ்க என்று மதிமுக சார்பில் வாழ்த்துகிறேன்”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x