சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை: உயர் நீதிமன்றம் வேதனை

Published on

சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை. அடிப்படைக் கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

அரசின் பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் சாலைப் பணிகள், நடைபாதைப் பணிகள், அரசு அலுவலகங்கள் கட்டுமானப் பணிகளின் தரத்தைப் பரிசோதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா பகவத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அமைக்கும் சாலைகள், ஆறு மாதங்கள் நீடிப்பதில்லை எனவும், இதை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சாலைகள், கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக விதிகள் உள்ளதாகவும், அவற்றை அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

சாலைகள் அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், குடிமக்கள் விழிப்புணர்வுடன் அதிகாரிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் பொறுப்பாக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை, அடிப்படைக் கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவித்த நீதிபதிகள், இன்னும் நாட்டின் பொருளாதாரம் 'டேக் ஆஃப்' நிலையிலேயே இருப்பதாகவும், எப்போது 'டேக் ஆன்' ஆகும் எனத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in