கொங்கு நாடு சர்ச்சை: அதெல்லாம் எதுக்கு பாவம்? - வடிவேலு கேள்வி

வடிவேலு: கோப்புப்படம்
வடிவேலு: கோப்புப்படம்
Updated on
1 min read

நன்றாக இருக்கும் தமிழகத்தை எதற்குப் பிரிக்க வேண்டும் என, நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (ஜூலை 14) தலைமைச் செயலகத்தில், நடிகர் வடிவேலு சந்தித்தார். கரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

அதன்பின், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு வடிவேலு பதிலளித்தார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

ஆட்சியமைத்து ஒரு மாதத்திலேயே உலகமே உற்றுநோக்கும் வகையில் கரோனா தொற்றை முதல்வர் கட்டுப்படுத்தியுள்ளார். மக்களுக்கு உண்மையில் மெய்சிலிர்க்கிறது. அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்களைக் கெஞ்சிக் கேட்டு, மக்களைத் தன்வசப்படுத்தி அழகாகச் செய்தார். யார் மனதும் புண்படாமல், அவர்களே ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் செய்தது, எங்களுக்குப் பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.

வீடு வீடாகக் காய்கறி வழங்கியது உட்பட பல விசயங்களால் பெண்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என, ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருவது, உண்மையில் மக்களுக்கு இதுவொரு பொற்கால ஆட்சி என நினைக்கிறேன்.

கொங்கு மண்டலத்தைக் கொங்கு நாடாகப் பிரிக்க வேண்டும் எனப் பேச்சு உள்ளதே?

ராம்நாடு, ஒரத்தநாடு என இருக்கிறது. இவ்வளவு நாட்டையும் பிரிக்க முடியுமா? அதெல்லாம் எதுக்கு பாவம். நன்றாக இருக்கும் தமிழகத்தை எதற்குப் பிரிக்க வேண்டும்? அரசியல் பேசவில்லை, அது வேண்டாம். இவற்றையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது.

இவ்வாறு வடிவேலு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in