Published : 14 Jul 2021 11:21 AM
Last Updated : 14 Jul 2021 11:21 AM

இந்த ஆட்சி பொற்கால ஆட்சி; கரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம்: முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தபின் வடிவேலு பேட்டி

வடிவேலு - முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

திமுக ஆட்சி பொற்கால ஆட்சி என, நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (ஜூலை 14) தலைமைச் செயலகத்தில், நடிகர் வடிவேலு சந்தித்தார். கரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

இதன்பின், வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். அவர் மிகவும் எளிமையாக, குடும்பத்தில் ஒருவர் மாதிரி பேசினார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினேன்" என்றார்.

அதன்பின், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு வடிவேலு பதிலளித்தார்.

திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாலேயே உங்களுக்குப் பட வாய்ப்புகள் குறைந்ததாகப் பேச்சு உள்ளது. இப்போது திமுக ஆட்சியில் அதிகமான திரைப்படங்களில் நடிப்பீர்களா?

கண்டிப்பாக நல்லதே நடக்கும்.

தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

ஆட்சியமைத்து ஒரு மாதத்திலேயே உலகமே உற்றுநோக்கும் வகையில் கரோனா தொற்றை முதல்வர் கட்டுப்படுத்தியுள்ளார். மக்களுக்கு உண்மையில் மெய்சிலிர்க்கிறது. அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்களைக் கெஞ்சிக் கேட்டு, மக்களைத் தன்வசப்படுத்தி அழகாகச் செய்தார். யார் மனதும் புண்படாமல், அவர்களே ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் செய்தது, எங்களுக்குப் பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.

வீடு வீடாகக் காய்கறி வழங்கியது உட்பட பல விசயங்களால் பெண்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என, ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருவது, உண்மையில் மக்களுக்கு இதுவொரு பொற்கால ஆட்சி என நினைக்கிறேன்.

மக்களிடம் கரோனா விழிப்புணர்வு எப்படி இருக்கிறது?

பலர் கேட்கின்றனர். ஒரு சிலர் நாங்கள் தேக்கு என்கின்றனர். தேக்காக இருந்தாலும் கரோனா அரித்துவிடுகிறது எனச் சொல்கிறோம். முகக்கவசம் போடுங்கள் என்றால் கேட்பதில்லை. சிலர் தடுப்பூசி போடுங்கள் என்றால் நான் நன்றாக இருக்கிறேன் எனக் கூறுகின்றனர். இப்போது வரிசையில் நின்று ஊசி போடுகின்றனர். நான் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டேன். இன்னும் 40 ஊசி செலுத்தச் சொன்னாலும் போடுவேன். அவ்வளவு பீதியாக இருக்கிறது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி சந்ததியைக் காக்க வேண்டும். தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.

திரையுலகம், ஓடிடி தளம் என மாற்றங்களைச் சந்தித்துள்ளதே?

ஆமாம், அடுத்தடுத்து போய்க் கொண்டிருக்கிறது. சினிமாவிலும் வாரிசுகள் என வரிசையாகப் போய்க்கொண்டிருக்கிறது. இனி ஓடிடி ஒரு குட்டி போடும். காலத்துக்கேற்றவாறு நாமும் நடிக்க வேண்டியதுதான்.

ஓடிடியில் நீங்கள் நடிப்பதாகச் செய்திகள் வருகிறதே?

அது நிறைய பேச்சுவார்த்தையில் இருக்கிறது. திரைப்படங்களும் இருக்கின்றன. நல்லதே நடக்கும்.

கொங்கு மண்டலத்தைக் கொங்கு நாடாகப் பிரிக்க வேண்டும் எனப் பேச்சு உள்ளதே?

ராம்நாடு, ஒரத்தநாடு என இருக்கிறது. இவ்வளவு நாட்டையும் பிரிக்க முடியுமா? அதெல்லாம் எதுக்கு பாவம். நன்றாக இருக்கும் தமிழகத்தை எதற்குப் பிரிக்க வேண்டும்? அரசியல் பேசவில்லை, அது வேண்டாம். இவற்றையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது.

இவ்வாறு வடிவேலு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x