Last Updated : 14 Jul, 2021 09:05 AM

 

Published : 14 Jul 2021 09:05 AM
Last Updated : 14 Jul 2021 09:05 AM

வரலாறு திரும்புகிறது: விழுப்புரம் மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பின் மக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம்

திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பொதுமக்களிடம் ஆட்சியர் த. மோகன் குறைகளை கேட்டறிந்தார்.

விழுப்புரம்

மக்களை நோக்கி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதை மக்கள் வரவேற்றுள்ளனர்.

கடந்த ஜூன் 16-ம் தேதி விழுப்புரம் ஆட்சியராக த.மோகன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் விழுப்புரம் நகராட்சியில் காலையில் நடைபயிற்சி செய்து கொண்டே ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஆட்சியர் த.மோகன், இந்து தமிழ்திசை நாளேட்டின் நிருபரிடம் கூறியதாவது

"சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்வோர் நல்ல கழிவறை வசதியுள்ள இடத்தில் நிறுத்தவும் என ஓட்டுநரிடம் சொல்வார்கள். அந்தவகையில், விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகளில் உள்ள பொதுகழிப்பறைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும், வீதி விளக்குகள் அனைத்தும் எரிய வேண்டும் என, நகராட்சி ஆணையர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன்.

வாரத்தில் 6 நாட்களில் காலை 6.45 முதல் 8 மணிவரை இரண்டு நகராட்சிகளிலும் தலா 3 நாட்கள் என, நடைபயிற்சி மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். காலையில் அமைச்சர்களின் நிகழ்ச்சி இருந்தால், அன்று மாலை நடைபயிற்சி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.

அதன்படி, தொடர்ந்து காலை வேளைகளில் நகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டவர், கடந்த சில நாட்களாக கிராமப்புறங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து முடிந்த அளவுக்கு அங்கேயே சான்று வழங்கி வருகிறார்.

மேலும், வாட்ஸ் அப் மூலமும் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரித்ததன் அடிப்படையில், பள்ளி மாணவி ஒருவருக்கு டிஜிட்டல் சாதிச்சான்றை வழங்கினார். அண்மையில், மயிலம் ஒன்றியத்துக்குட்பட்ட காட்டு சிவிறி கிராமத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார். தொடர்ந்து, திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் வாழும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கடந்த 1997-1998-ம் ஆண்டுகளில் விழுப்புரம் ஆட்சியராக பதவிவகித்த அதுல்ய மிஸ்ரா மக்களை நோக்கித்தான் அரசாங்கம் செல்ல வேண்டும். அதற்காக நான் மக்களை நோக்கி பயணிக்க போகிறேன் என்று அறிவித்தார். இதை 'மக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம்' என தலைப்பிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சுமார்12 நாட்கள் கிராமங்களில் நடந்து சென்று மக்களை சந்திப்பது, அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பது, மேலும் இரவாகிவிட்டால் அங்கேயே ஒருவர் வீட்டில் தங்கி அடுத்த கிராமத்துக்கு செல்வது என திட்டமிட்டு செயல்படுத்தினார்.

இது குறித்து, ஆட்சியர் மோகனிடம் கேட்டபோது, "காலை 10 மணிக்கு அலுவலகம் வரும் முன்பு நாள்தோறும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு செய்கிறேன். நேரில் செல்லும்போதுதான் தற்போதைய நிலை தெரியவருகிறது. நடைபயிற்சி போனது போலவும், மக்களை நேரடியாக சந்தித்தது போலவும் அவர்களின் குறைகளையும் கேட்க முடிகிறது. இம்மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்புவகித்த அதுல்ய மிஸ்ரா இப்படி செய்துள்ளார் என்ற தகவல் மேலும் எனக்கு ஊக்கமளிக்கிறது, பொறுப்பு கூடியுள்ளது" என்றார்.

'மக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம்', விழுப்புரம் மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு திரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x