

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 4 படைவீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மறைந்த படைவீரர்களின் வாரிசுகளை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததுடன், கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியில் இருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சோளம்பட்டியை சேர்ந்த மறைந்த படைவீரர் என்.பாலமுருகன் தாய் குருவம்மாள், கிருஷ்ணகிரி மாவட்டம் ராகிமானபள்ளியை சேர்ந்தமறைந்த படைவீரர் என்.சந்தோஷின் தாய் சித்ரா, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மறைந்த படை அலுவலர் எஸ்.ஆனந்தின்மனைவி பிரியங்கா நாயர், திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரையைச் சேர்ந்த படைவீரர் எஸ்.சபரிநாதனின் தாய் எஸ்.மனோன்மணி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து ரூ.20 லட்சம் நிவாரண நிதியை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் பொதுத் துறை செயலர் டி.ஜெகந்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.