

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தனது அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இன்றுதாக்கல் செய்ய உள்ளது. இதற்கிடையில், இக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்தவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 10-ம் தேதி உத்தரவிட்டார். இக்குழுவில் சுகாதாரம், சட்டம், பள்ளிக்கல்வித் துறைகளின் செயலர்கள், மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன் ஆகியோர் உள்ளனர்.
நீட் தேர்வின் பாதிப்பு குறித்து இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளமருத்துவக் கல்வி இயக்குநரகத்தில்பல்வேறு கட்டமாக நடைபெற்றது.பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களிடம் இருந்து இதுவரை 89,342 கருத்துகளும் பெறப்பட்டன.
இந்நிலையில், அரசிடம் சமர்ப்பிக்க அறிக்கையை இக்குழு முழுமையாக தயார் செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு இன்று சந்தித்து நீட் தேர்வு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
வழக்கு தள்ளுபடி
இதற்கிடையில், இக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தமிழக பாஜகபொதுச் செயலாளர் கரு.நாகராஜன்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவி நந்தினி உள்ளிட்ட பலரும் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘இது ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி’ என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இதுதொடர்பான சட்டம் கொண்டு வரப்பட்டது. குழு அமைத்திருப்பது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்தவழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கரு.நாகராஜன் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, மாணவி நந்தினி மற்றும் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சந்திரமோகன், மத்திய அரசு தரப்பில் கூடுதல்சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், தமிழக அரசு தரப்பில் தலைமைவழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே இக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அரசின்இந்த அறிவிப்பாணைக்கும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் சம்பந்தம் இல்லை. விளம்பர நோக்கில் இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன. குழுவின் ஆய்வு அறிக்கை மூலமாக மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் நிலைமை தெரியவரும். அதன் மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவர ஏதுவாக அமையும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இக்குழு அமைக்கப்படவில்லை. இதன் அறிக்கை அடிப்படையில், நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம். அல்லது நீட் தேர்வில் மாற்றங்கள் உருவாக காரணமாக அமையலாம். எனவே, இக்குழுவுக்கான செலவு வீண் என்று கூறிவிட முடியாது.
தவிர, பொதுநலன் சார்ந்த விஷயம்தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பது, அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. தவிர,மாநில அரசு தனது அதிகார வரம்பைமீறவில்லை. இவ்வாறு கூறிய நீதிபதிகள், பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும் என்று மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.