

பெண்களை வைத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட புகாரில் மத போதகர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளையை அடுத்துள்ள எஸ்.டி.மங்காட்டைச் சேர்ந்தவர் லால் ஷைன்சிங் (40). கிறிஸ்தவ மதபோதகரான இவர், தனது வீட்டில் `ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் பிரார்த்தனைக் கூடம் நடத்தி வந்தார்.
இந்தப் பிரார்த்தனைக் கூடத்துக்கு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்து சொகுசு கார்களில் இளம் பெண்களும், ஆண்களும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி வந்து சென்றனர். அங்கு, தவறான செயல்கள் நடப்பதாக நித்திரைவிளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
கடந்த ஒரு வாரத்துக்கும்மேலாக இந்தப் பிரார்த்தனைக்கூடத்தை போலீஸார் ரகசியமாககண்காணித்தனர் நேற்று முன்தினம்இரவு போலீஸார் சுற்றிவளைத்தபோது, 19 வயது பெண்கள் இருவர் உட்பட 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அந்த கூடத்தில் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, பிரார்த்தனைக் கூடத்துக்கு வெளியூர்களில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதை ஒப்புக்கொண்டனர்.
போதகர் லால் ஷைன்சிங், பனங்காலையைச் சேர்ந்த ஷைன், மேக்கோட்டைச் சேர்ந்த ஷிபின் மற்றும் 4 பெண்களை, போலீஸார் கைது செய்தனர். சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 19 வயதுபெண்கள் இருவரும் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவ்விருவரில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது பெண், பெற்ற தாயால் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
கிறிஸ்தவப் பிரார்த்தனைக் கூடத்தில் பாலியல் குற்றம் நடந்திருப்பதும், போதகருடன் 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.