

போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்வோர் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.
சேலம் கோட்ட வணிக வரித் துறை சார்பில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், வணிக வரித் துறை ஆணையர் சித்திக், பத்திரப் பதிவுத் துறைச் செயலர் ஜோதி நிர்மலாசாமி, சேலம் ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, வணிக வரித் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
வணிகர்களின் சிரமங்கள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் கோட்ட அளவில் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வணிகர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும்.
போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்வோர் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரி விதிப்பு தொடர்பாக வணிகர்களின் கோரிக்கைகள் ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணப்படும் என்றார்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த காலத்தில் பத்திரப்பதிவுத் துறையில் போலி பதிவு, ஆள் மாறாட்டம், அரசின் வழிகாட்டு மதிப்புக்கு எதிரான செயல்பாடுகள் உள்ளிட்ட தவறுகள் நடந்துள்ளன. அதுபோன்ற சில தவறுகளை கண்டுபிடித்து அதிகாரிகள் பணியிட மாறுதல், 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் வழிகாட்டி மதிப்பைவிட கூடுதலாக பத்திரம் பதிவு செய்யக்கூடாது. அரசு நிலம், வழிபாட்டு தலங்களின் நிலத்தை பதிவு செய்யக் கூடாது என்று அரசு விதி உள்ளது. சார் பதிவாளர்களால் தவறாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை, ரத்து செய்ய நீதிமன்றம் வரை செல்ல வேண்டும்.
இதைதவிர்க்க, தவறான பதிவுகளை அதிகாரிகளே கலந்தாலோசித்து, உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.