

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், மாநிலம் முழுவதும் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளைத் தொடர்ந்து, கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், கரோனா வைரஸ் பரவல் 3-வது அலை வரக்கூடும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். எனவே, கரோனா வைரஸ் பரவல் 3-வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது கேள்விக்குறியாகியது.
இதையடுத்து, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று வியாபாரிகளுக்கு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ``தியாகராய நகர் பகுதியில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடைகள், உணவகங்களில் சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா, கைகழுவும் திரவம் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம். மேலும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளோம். இதனால், கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் சுமார் ரூ.3 லட்சம் அபராதம் வசூல் செய்தோம்.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்'' என்றனர்.