தமிழக பாஜக தலைவராக சென்னையில் 16-ம் தேதி அண்ணாமலை பதவியேற்பு

தமிழக பாஜக தலைவராக சென்னையில் 16-ம் தேதி அண்ணாமலை பதவியேற்பு
Updated on
1 min read

சென்னையில் வரும் 16-ம் தேதி தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை பதவியேற்க உள்ளார்.

அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அவர் வரும் 16-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக பொதுச் செயலர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று (ஜூலை 14) காலை கோவையில் புறப்படும் அண்ணாமலை, பல்லடம், திருப்பூர், பெருந்துறை, ஈரோடு, சங்ககிரி, சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர், கரூர், குளித்தலை வழியாக திருச்சி வந்தடைகிறார்.

நாளை காலை திருச்சியிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர், தொழுதூர் சந்திப்பு, வேப்பூர் சந்திப்பு, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி வழியாக தாம்பரம் வந்தடைகிறார்.

வரும் 16-ம் தேதி தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், சைதாப்பேட்டை வழியாக சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மாநில முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா, பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

முன்னதாக வரும் 16-ம் தேதி காலை விமானம் மூலம் சென்னை வரும் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கும் கமலாலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in