

தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு நபார்டு வங்கி நடப்பு நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி வழங்க உள்ளதாக, வங்கியின் தொடக்க தின விழாவில் தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார்.
தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-வது தொடக்க தின விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசியபோது, ‘‘கடந்த நிதியாண்டில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நபார்டு வங்கிரூ. 27,135 கோடி கடனுதவி வழங்கியது. நடப்பு நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி வழங்க உள்ளது’’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ஹன்ஸ்ராஜ் வர்மா தனது உரையில், ‘‘இன்று ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம்’’ என்றார்.
நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் பேசும்போது, ‘‘ஊரக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை நபார்டு வங்கி செயல்படுத்தி வருகிறது’’ என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பங்களித்த வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் இம்ரான் அமின் சித்திக் முன்னிலையில் இந்தியன் வங்கிக்கும், நபார்டு வங்கிக்கும் இடையே பல்வேறு கடனுதவித் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. நபார்டு வங்கி தயாரித்த கடல்பாசி வளர்ப்பு குறித்த கையேடும் வெளியிடப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலக தலைமை பொது மேலாளர் சுமன் ரே, கனரா வங்கி தலைமை பொது மேலாளர் பி.பழனிசாமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் புவன் சந்திர சர்மா உட்பட பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.