Last Updated : 14 Jul, 2021 03:14 AM

 

Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM

ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கேகடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் குமார மங்கலத்துக்கும் இடையேகட்டப்பட்டு வரும் கதவணை பணிகள் 70 சதவீதம் முடிவடைந் துள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம்குமாரமங்கலத்துக்கும் இடையேரூ.494.84 கோடியில் கட்டப்பட்டு வரும் கதவணை பணி கடந்த 04.05.2019 அன்று தொடங்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு கடந்த 02.11.2018 அன்று நிர்வாக ஒப்புதல் வழங்கியது.

1064.40 மீட்டர் நீளத்திற்கு 84 கண்வாய்களில் 10 அடி உயர இரும்பு அடைப்பு பலகைகளைஅமைத்து 0.334 டி.எம்.சி தண்ணீரை தேக்கவும், 307 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீரை செறிவூட்டவும் இந்த கதவணை கட்டப்படுகிறது. இந்த கதவணையின் மேல் போக்குவரத்து செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தூண்கள், இடது கடையில் சுவர்அமைக்கும் பணி, வடக்கு ராஜன்மற்றும் தெற்கு ராஜன் கால்வாய்களின் தலைப்பு மதகு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த கதவணைக்காக கொள்ளிடம் ஆற்றின் இடது கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கதவணையின் 84 இரும்பு அடைப்பு பலகைகள் மற்றும் அதை சார்ந்த அமைப்புகள் உருவாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பணியை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடித்திட பொதுப் பணித்துறையினர் திட்டமிட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

“இந்த கதவணை மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தெற்கு ராஐன் கால்வாய் மூலம் மயிலாடுதுறை தாலுகா மற்றும் சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த 6 ஆயிரத்து 320 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும். மேலும், கடலூர் மாவட்டத்தில் வடக்கு ராஐன் கால்வாய் மற்றும் கான்சாகிப் கால்வாய் மூலம் காட்டுமன்னார்கோவில் தாலுகா மற்றும் சிதம்பரம் தாலுகாவைச் சேர்ந்த 16 ஆயிரத்து 313 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி உறுதிபெறும். மேலும் இக்கதவணையின் அருகாமையில் உள்ள கிணறுகளின் மூலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா மற்றும் திருவிடைமருதூர் தாலுகாவினை சேர்ந்த 657 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கூடுதல் பாசனம் பெறும். மேலும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகாவைச் சேர்ந்த 1,129 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கூடுதல் பாசனம் பெறும்” என்று இந்த சிறப்பு திட்டத்தின் பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தமிழ்ச் செல்வன் தெரிவிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x