

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் தண்ணீர் சூழ்ந்து சேதமடைந்து வரும் திக்குறிச்சி மகாதேவர் ஆலய சுற்றுச்சுவர் பலப்படுத்தப்படும் என, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திக்குறிச்சி மகாதேவர் கோயில்,குழித்துறை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மற்றும் குழித்துறை, திற்பரப்பு, மண்டைக்காடு தேவஸ்தான பள்ளிகளை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திக்குறிச்சி மகாதேவர் கோயில்தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. ஆற்றுத் தண்ணீரால் கோயில் சுற்றுச்சுவர் பலம் குறைந்துள்ளது. சுற்றுச்சுவரை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குழித்துறை தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வந்த தேவஸ்வம் ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன.
இவற்றை புனரமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும். குழித்துறையில் திருவிதாங்கூர் மன்னருக்கு சொந்தமான 400 ஆண்டுகள் பழமையான அரண்மனை பாழடைந்த நிலையில் உள்ளது. அரண்மனையை பாதுகாக்கும் பணியைமேற்கொள்ள உள்ளோம். தமிழகத்தில் உள்ள கோயில்களில் 30 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகள் குளிப்பதற்கு அந்தந்த திருக்கோயில்களில் குளியலறை அமைக்கப்பட்டுள்ளது என்றார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் மா.அரவிந்த், விஜயதரணி எம்எல்ஏ உடனிருந்தனர்.