

உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கின் விசாரணை திருமயம் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முன்ஜாமீ்ன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திடீரென மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018-ல் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். அங்கு மேடை அமைக்க போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து போலீஸாருடன் எச்.ராஜா கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
இதனால் நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாகப் பேசியது, தடையை மீறியது, பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 3 ஆண்டுகளாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து 2 மாதத்தில் திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பின்னரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் துரைசாமி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து திருமயம் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் எச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் ஜூலை 23 முதல் விசாரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் எச்.ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ''மேடை அமைப்பது தொடர்பான பிரச்சினையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் பேரில் என் மீது திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நான் தலைமறைவாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் போலீஸார் என்னைக் கைது செய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றத் தயாராக உள்ளேன்'' என எச்.ராஜா கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.