

அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. தேர்தலின்போது சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ஒட்டன்சத்திரத்தில் ஒன்றிய அலுவலகம் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், 9 பேருக்குக் கிராம உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணிக்கான பூமிபூஜை விழா இன்று நடைபெற்றது. இதற்குத் திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பூமிபூஜையில் கலந்துகொண்டு கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், ''திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைக் கொண்டுவர உள்ளோம். இது தொடக்கம்தான். மேலும் நிறையத் திட்டங்கள் மாவட்டம் முழுமைக்கும் கொண்டுவரப்படும். படித்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட வேலையில்லாமல் இருப்பவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் எந்தப் பிரதிபலனும் பாராமல் வேலை வழங்கப்படும்.
தேர்தலின்போது சொல்லாத 14 வகை மளிகைப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கியவர் தமிழக முதல்வர். நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் இந்த அரசு கண்ணும்கருத்துமாக உள்ளது. தேர்தலின்போது சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சமமாக வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். பரம்பிகுளம், ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டங்கள் தொடங்கவுள்ளன. ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. பருவநிலை மாற்றத்தைத் தவிர்க்க மரக்கன்றுகள் நடப்பட்டு அவை முறையாகப் பராமரிக்கப்படும்'' என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்பது பேருக்குக் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆணையை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார். தொடர்ந்து ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய வழித்தடத்தில் பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களுக்குச் சென்று 20-க்கும் மேற்பட்ட திட்டப்பணிகளை அந்தந்த கிராமங்களில் தொடங்கிவைத்தார்.