

மதுரை கரிமேடு மீன் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். கடந்த பல மாதமாகத் தொடர்ந்து இந்தச் சந்தையில் உண்ணத் தகுதியற்ற மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதால் உணவுப் பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கரிமேட்டில் தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய மீன் சந்தை உள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படும் மீன்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டு சில்லரையாகவும், வியாபாரிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன் சந்தையில் மீன்களை நீண்ட நாட்கள் பாதுகாப்பதற்காக ரசாயனம் தெளிப்பதாகவும், காலாவதியான மீன்களைச் சாலையோர உணவகங்களுக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று காலை மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கரிமேடு மீன் சந்தையில் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களில் ரசாயனம் மற்றும் உண்பதற்கான தரம் குறித்து ஆய்வகப் பரிசோதனை செய்தனர்.
இதில் உண்ணுவதற்குத் தகுதியற்ற வகையிலான, காலாவதியான மீன்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்து 500 கிலோ எடையுள்ள மீன்களைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக உண்ணத்தகுதியற்ற மீன்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்த உணவுத் துறையினர் இது போன்ற உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபட்டால் வரும் காலங்களில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
மதுரையில் உள்ள பிரபல மீன் சந்தையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது தரமற்ற மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இறைச்சி உணவுகளை உண்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.