Published : 13 Jul 2021 05:42 PM
Last Updated : 13 Jul 2021 05:42 PM

2 ஜிபி இலவச டேட்டா கார்டு; எங்கள் ஆட்சி போலவே தொடர்ந்து வழங்குக: இபிஎஸ் வலியுறுத்தல்

நமது மாணவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும், அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தவும், திமுக அரசு ஏற்கெனவே அதிமுக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா 2 ஜிபி தரவு அட்டைகளை (டேட்டா கார்டுகளை) புதுப்பித்து, இந்த ஆண்டு புதிதாகச் சேரும் மாணவர்களுக்குப் புதிய அட்டைகளை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

“எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்து கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து, ஜெயலலிதாவும், கடந்த ஆட்சியும் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக உயர் கல்வியில், திமுக ஆட்சியில் 2010-11ஆம் ஆண்டில் 32.9 விழுக்காடாக இருந்த உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம், தற்போது 51.40 விழுக்காடாக உயர்ந்து, இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்து வருகிறது.

பெரிய மாநிலங்களுடன் குறிப்பாக, கேரளாவுடன் போட்டி போட்டுத் தமிழகம் உயர் கல்வியில் பெரும் வளர்ச்சியைப் பெற்று இந்தியாவிலேயே தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதற்கு, அதிமுகவின் 30 ஆண்டு கால ஆட்சியின் மாட்சியே காரணம்.

கடந்த 10 ஆண்டுகளில் 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள் மற்றும் 17 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மேலும், பள்ளிக்கல்வித் துறையின் மூலம் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்குதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் போன்ற பல நல்ல திட்டங்களே காரணம்.

இதன் காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்வியில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்த கேரளாவை நாம் முந்தியுள்ளோம். 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக ஜெயலலிதா அரசு 34,687.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது வரலாற்றுச் சாதனையாகும். வேறு எந்த மாநிலமும் கல்விக்கு இந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்தது இல்லை.

மேலும், ஜெயலலிதாவும், அதிமுக அரசும் எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக கற்றல், கற்பித்தல் போன்றவை தமிழகத்தில் உயர்ந்தும், இடைநிற்றல் வெகுவாகக் குறைந்தும், ஆரம்பப் பள்ளி முதல் உயர்கல்வி வரை பல லட்சம் மாணவர்கள் பயின்று வருவதும் தமிழகத்தைத் தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளது.

கடந்த ஆண்டு கோவிட் -19 பெரும் தொற்றின் காரணமாக, தமிழகக் கல்லூரிகளில் வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலையில், மாணவர்களின் நலனுக்காகக் கல்வி நிறுவனங்கள் இணையவழி (ஆன்லைன்) வகுப்புகளை நடத்தின.

இந்த இணையவழி வகுப்புகளில் அனைத்து மாணவ, மாணவிகள் பங்கேற்க முடியவில்லை. முக்கியமாக, அனைத்து மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர்கள் ஆண்ட்ராய்டு கைப்பேசியோ அல்லது அரசு வழங்கிய மடிக்கணினியோ வைத்திருந்தாலும், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அதற்குண்டான டேட்டா கார்டு வாங்க இயலாத நிலையில் இருந்தனர்.

எனவேதான், எங்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் பயின்ற சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் மாணாக்கர்களுக்கு கடந்த ஜனவரி (2021) மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவுடன் உடன் கூடிய தரவு அட்டைகளை வழங்க உத்தரவிட்டது.

தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டு) மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களும் சிறந்த முறையில் ஆன்லைன் வகுப்பில் கல்வி பயின்றார்கள்.

கலை-அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே முதலாம் ஆண்டு படித்த மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்கும், இரண்டாம் ஆண்டு படித்த மாணவர்கள் மூன்றாம் ஆண்டுக்கும், மூன்றாம் ஆண்டு படித்த மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கும் சென்றுள்ளனர்.

கோவிட் தொற்று இன்னும் முழுமையாகக் குறையாத காரணத்தால் இந்த ஆண்டும் கல்லூரிகள் திறக்கப்படுமா? நேரடி வகுப்புகள் நடைபெறுமா? அல்லது ஆன்லைன் வாயிலாகத்தான் கல்வி கற்க வேண்டுமா? என்று புரியாமல் நமது மாணவச் செல்வங்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

எனவே, கல்வி நிறுவனங்கள் தற்போது செயல்படவில்லை என்றாலும், மாணாக்கர்களில் சிலர் இந்த ஆண்டுக்கான பாடங்களை இணையவழி, இணையவழி நூலகம், கூகுள் சர்ச் போன்ற முறைகளில் தரவிறக்கம் செய்து பயின்று வருகிறார்கள்.

அதிமுக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டுகள்) இந்த ஆட்சி வந்த பிறகு புதுப்பிக்கப்படாததால், அனைத்து மாணவர்களும் இணையவழியில் பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மை மற்றும் மத்திய தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் மாதம் ஒன்றுக்கு சுமார் 200 ரூபாய் முதல் அதிகபட்சம் 400 ரூபாய் வரை செலவு செய்து, அதிமுக அரசு வழங்கிய டேட்டா கார்டுகளைப் புதுப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே, நமது மாணவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும், அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தவும், திமுக அரசு ஏற்கெனவே அதிமுக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா 2 ஜிபி (டேட்டா கார்டுகளை) தரவு அட்டைகளைப் புதுப்பித்தும், இந்த ஆண்டு புதிதாகச் சேரும் மாணவர்களுக்குப் புதிய அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x