காவலில் விசாரணைக் கைதி கொல்லப்பட்ட வழக்கு: விசாரணை அதிகாரியான எஸ்.பி. மாற்றம்

காவலில் விசாரணைக் கைதி கொல்லப்பட்ட வழக்கு: விசாரணை அதிகாரியான எஸ்.பி. மாற்றம்
Updated on
1 min read

காவலில் விசாரணைக் கைதி கொல்லப்பட்ட வழக்கில், காவலர் புகார் ஆணைய உத்தரவுப்படி விசாரணை அதிகாரியான எஸ்.பி., வீர.பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய விசாரணை அதிகாரியாக எஸ்.பி. ரங்கநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக 2018ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரைப் புதுச்சேரி பாகூர் போலீஸார் பிடித்துச் சென்றனர். அவரைக் காவல் நிலையத்தில் வைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதன் பின்னர், அவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குப் போட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறையிலும் அவர் தாக்கப்பட்டதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பின்னர், அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துப் போனார்.

இவ்வழக்கில் அப்போதைய பாகூர் காவல்நிலைய எஸ்.ஐ. ஜெயகுருநாதன், உதவி எஸ்.ஐ. திருமால், காலாப்பட்டு மத்திய சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவ அதிகாரி டாக்டர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையை பி.சி.ஆர். பிரிவு எஸ்.பி., வீர.பாலகிருஷ்ணன் மேற்கொண்டு வந்தார். இவ்வழக்கின் விசாரணை அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்ததாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு புகார் தெரிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட போலீஸார், சிறைக் கண்காணிப்பாளர் என எவரையும் கைது செய்யவில்லை.

விசாரணையை முடித்து உரிய காலத்தில் குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்யத் தவறிய, விசாரணையையே தொடங்காத எஸ்.பி., வீர.பாலகிருஷ்ணன் மீது காவலர் புகார் ஆணையத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு மனுவை அளித்தது.

மனு மீது விசாரணை மேற்கொண்ட காவலர் புகார் ஆணையத் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜசூர்யா, வழக்கு விசாரணையைத் தற்போதைய விசாரணை அதிகாரியிடம் இருந்து மாற்றி வேறொரு அதிகாரியிடம் ஒப்படைக்க டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் விசாரணை அதிகாரியான எஸ்.பி., வீர.பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக மேற்குப் பகுதி எஸ்.பி. ரங்கநாதன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in