Published : 13 Jul 2021 05:20 PM
Last Updated : 13 Jul 2021 05:20 PM

பழநியில் கேரளப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை; மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தகவல்: திண்டுக்கல் டிஐஜி

பழநி  

கேரளாவைச் சேர்ந்த பெண் பழநிக்கு வந்தபோது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், புதிய திருப்பமாக, அவர் வன்கொடுமைக்கு ஆளானதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனக் கேரள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணிடம் விசாரிக்கத் தமிழக போலீஸார் கேரளா சென்றுள்ளனர் என்றும் திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி தெரிவித்தார்.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே தலைச்சேரியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி பழநி வந்தபோது அவரைக் கடத்திச் சென்று சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக போலீஸாருக்கு கேரள போலீஸார் தகவல் தெரிவித்தனர். தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா பழநியில் நேரில் விசாரணையைத் தொடங்கினார். இதில் கடத்தல் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தல் என இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு விசாரணை விவரங்கள் குறித்து இன்று திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி பழநியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ''பழநியில் கேரளப் பெண் வழக்கில், விடுதிப் பணியாளர்கள், சிசிடிவி காட்சிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், அலைபேசி உரையாடல்களைக் கொண்டு முதற்கட்ட விசாரணை நடந்தது. இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த ஜூன் 19-ம் தேதி சம்பந்தப்பட்ட பெண், தர்மராஜ் (35) ஆகிய இருவரும் பழநியில் விடுதி எடுத்துத் தங்கியுள்ளனர். மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரையும் விடுதி உரிமையாளர் வெளியேற்றியுள்ளார். இதன்பின் இருவரும் ஜூன் 25-ம் தேதி வரை பழநியில் சுற்றித் திரிந்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் போலீஸாரிடம் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண், தர்மராஜ் ஆகியோர் கணவன், மனைவி இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான எந்தவித உடல் காயங்களும் இல்லை எனக் கேரளாவில் அப்பெண்ணுக்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதற்கான அறிக்கையும் கிடைத்துள்ளது. மேலும், கேரளாவில் இருந்து விடுதி உரிமையாளருக்குப் பணம் கேட்டு மிரட்டி, இரண்டு முறை அலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த திண்டுக்கல் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் கேரளா சென்றுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் தர்மராஜ் ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தி உண்மை நிலையை அறிய உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை விவரங்கள் இன்னும் சில தினங்களில் தெரியவரும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x