மேகதாது அணை விவகாரம்; புதுச்சேரியிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம்: அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரம்; புதுச்சேரியிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம்: அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
Updated on
1 min read

மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழகம் போல் புதுச்சேரியிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 6 ஆயிரம் தரவேண்டும், முடங்கியுள்ள புதுச்சேரி அரசு நிர்வாகம் செயல்பட வலியுறுத்தி வரும் 15-ல் புதுச்சேரி, காரைக்காலில் 100 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் சலீம் தெரிவித்தார்.

புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சலீம் இன்று (ஜூலை 13) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மேகதாதுவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறித் தற்போது அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. இவ்விஷயத்தில் உறுதியான எதிர்ப்பைப் புதுச்சேரி அரசு தெரிவிக்க வேண்டும். தமிழகத்தைப் போல் புதுச்சேரி அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

தென்பெண்ணையாற்றில் பெரிய அணையைக் கர்நாடக அரசு கட்டி முடித்துள்ளது. இதனாலும் பாகூர் உள்ளிட்ட புதுச்சேரி பகுதிக்கும் பெரும் பாதிப்பு உள்ளது. இவ்விஷயங்களில் மத்திய அரசுக்குப் புதுச்சேரி அரசு அழுத்தம் தரவேண்டும். ஆனால், அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது.

கரோனா ஊரடங்கில் புதுச்சேரியை ஒட்டிய மாநிலங்களில் மக்களுக்கு நிவாரணத் தொகை, உணவுப் பொருட்கள் தரப்பட்ட சூழலில் புதுச்சேரி மக்கள் கைவிடப்பட்டார்கள். என்.ஆர்.காங்கிரஸும்-பாஜகவும் களப் பணியாற்றாமல் பதவிச் சண்டையில் மூழ்கி மக்களை மறந்துவிட்டன. தற்போது மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படுகிற நிவாரணத் தொகை ரூ. 6000, பத்து கிலோ அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். முடங்கியுள்ள புதுச்சேரி அரசு நிர்வாகத்தைச் செயல்பட அறிவுறுத்தி புதுச்சேரி, காரைக்காலில் 100 மையங்களில் ஆர்ப்பாட்டம் வரும் 15-ம் தேதி நடக்கிறது" என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், கட்சி நிர்வாகிகள் சேதுசெல்வம், கீதநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in