

"காங்கிரஸ் முதுகில் குத்திச் சென்றவரின் முதுகில் அவரது மாமனார் ரங்கசாமியே குத்துகிறார். காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள்" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் கிராமப் பகுதியான மண்ணாடிப்பட்டு தொகுதியில் லிங்காரெட்டி பாளையத்தில் இன்று நடந்த போராட்டத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாட்டு வண்டிகளில் டூவீலர் ஏற்றி வைத்து ஊர்வலமாக அவர்கள் சென்றனர். அதில் நாராயணசாமி, வைத்திலிங்கம், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
பின்னர் கையெழுத்து இயக்கத்தை பெட்ரோல் பங்க் அருகே தொடங்கினர். சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, விறகு அடுப்பில் சாலையில் பெண்கள் சமைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "பெட்ரோல் விலை ரூ.100 ஆகிவிட்டது. சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துவிட்டது. இதைக் கண்டித்து மக்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளோம். வரும் 17-ம் தேதி வரை பெட்ரோல் பங்க்கில் நடத்துவோம். மத்தியில் மோடி அரசு தூக்கி எறியப்படவேண்டும். அப்போதுதான் விவசாயி, தொழிலாளர் கூலி வேலை செய்வோருக்கு பாதுகாப்பு கிடைக்கும். எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து அடுத்ததாக சைக்கிள் பேரணி நடத்த உள்ளோம்.
பாஜக இத்தொகுதியில் வென்றுள்ளது. காங்கிரஸின் முதுகில் குத்திவிட்டுச் சென்றவர் (அமைச்சர் நமச்சிவாயம்) இங்கு தேர்வாகியுள்ளார். நம் முதுகில் அவர் (நமச்சிவாயம்) குத்தினார். அவரது மாமனார் ரங்கசாமியே அவர் முதுகில் குத்துகிறார். காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள்.
மாட்டுவண்டி, சைக்கிளில் செல்வதைப் பார்த்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பார்கள் எனப் பார்க்கிறோம். இல்லாவிட்டால் எரிபொருள் செலவாவது குறையும்" என்று நாராயணசாமி குறிப்பிட்டார்.