Published : 13 Jul 2021 01:47 PM
Last Updated : 13 Jul 2021 01:47 PM

பிஹாரைக் காட்டிலும் தமிழக அரசு மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியம்: உயர்த்தி வழங்க கே.எஸ்.அழகிரி கோரிக்கை

பிஹார் மாநிலத்தில் வழங்கப்படுவதைக் காட்டிலும் தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுவதாகவும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, கரோனா தொற்றுப் பரவல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் உறுதியான நடவடிக்கை மூலம், 36 ஆயிரமாக உச்சத்தில் இருந்த தினசரி கரோனா தொற்று எண்ணிக்கையை மூன்றாயிரத்துக்கும் கீழே குறைத்துள்ளதை நாடே பாராட்டிக் கொண்டிருக்கிறது.

இதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இரவு, பகலாக உழைத்த அரசு மருத்துவர்கள், மூன்றாவது கரோனா அலையே வந்தாலும் முதல்வர் வழிகாட்டுதலின்படி சமாளிக்க உறுதியாக இருக்கிறார்கள். இதற்காக அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும், தொலைநோக்குப் பார்வையோடு அமைக்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றுக்குப் பல மருத்துவர்களை இழந்தோம். ஏராளமான மருத்துவர்களுக்குத் தொற்று ஏற்பட்டபோதும், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு எனத் தெரிந்தும், அரசுக்கும், மக்களுக்கும் அவர்கள் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுத்ததோடு, கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு, ஊக்கத்தொகையாக 30 ஆயிரம் ரூபாய் வழங்க முன்வந்ததற்காகத் தமிழக அரசை மருத்துவர்கள் மனதாரப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும், நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்கள் பெற்று வருகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியில் நியாயமான ஊதியக் கோரிக்கைக்காகப் போராடிய 118 மருத்துவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். நாட்டிலேயே ஊதியக் கோரிக்கைக்காகப் போராடிய மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் தமிழகத்தில்தான் நடந்தது. அதன் பிறகும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அரசு முன்வரவில்லை.

சுகாதாரத் துறைச் செயல்பாடுகளில் 25ஆவது இடத்தில் உள்ள பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில்கூட, அரசு மருத்துவர்களுக்குத் தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. ஆனால், முன்னணி மாநிலமான தமிழகத்தில் மருத்துவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக உரிய ஊதியம் மறுக்கப்பட்டு வந்துள்ளது. அதுவும் மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியத்தை விடத் தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியமே தரப்படுகிறது.

ஒவ்வொரு அரசு மருத்துவரும் கடந்த 10 வருடங்களாக மாதம்தோறும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் வருமான இழப்புடன் மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. அதுவும் இதில் பெரும் பகுதியை மருத்துவர்கள் காப்பீடு மூலமாகவே அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தர முடியும். கடந்த 10 ஆண்டுகள் களத்தில் போராடிய மருத்துவர்களுக்குக் குரல் கொடுத்து வந்த முதல்வருக்கு மருத்துவர்களின் வலி நன்றாகவே தெரியும்.

ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள், கரோனா தடுப்பூசி போன்றவற்றின் இருப்பை உறுதி செய்யும் வகையில் தீர்வை ஏற்படுத்தி வருவதோடு, கரோனாவுக்கே முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அயராது பாடுபட்டு வருகிறார். அதுபோல, அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையான PB4 @12yrs-ஐ (12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு) முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354-ன்படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம் 10 ஆண்டுகளாக மனப்புழுக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் முதல்வர் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x