

“தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களிடையே ஒதுக்கப்பட்டதைவிட விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. மேற்கண்ட 3 மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் வழங்கப்படும் ஏற்றத்தாழ்வைச் சரிசெய்ய வேண்டும். தமிழகத்திற்கு 1 கோடி டோஸ் சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கான கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது எனக் குறிப்பிட்டு, தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும், தமிழ்நாட்டிற்கு மக்கள்தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைத்திடவும், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திடக் கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (13-7-2021) கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம்:
“மே 27ஆம் தேதியிட்ட எனது முந்தைய கடிதத்தை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அதில் கோவிட் -19 தடுப்பூசிகளைத் தமிழகத்திற்கு விசேஷமாக ஒதுக்கீடு செய்வதில் உங்கள் உடனடித் தலையீட்டை நான் கோரியிருந்தேன். ஆயிரம் மக்களுக்கு இவ்வளவு என ஒதுக்கீடு செய்வதில் தமிழகத்திற்கு தேவைக்கேற்ற அளவுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
8-7-2021 வரை, 29,18,110 தடுப்பூசிகளை மட்டுமே தமிழகம் மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது, 18-44 வயது பிரிவில் உள்ளவர்களுக்கும், மேற்கூறிய 45 வயது பிரிவில் 1,30,08,440 தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன.
தடுப்பூசிகளின் ஒதுக்கீடு மிகவும் போதுமானதாக இல்லாததால், மாநிலம் முழுவதும் தடுப்பூசிக்கான பெரும் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது. பொதுமக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை நீக்கி, தடுப்பூசி போடும் இயக்கத்தை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றுவதற்கான எனது அரசின் முயற்சிகளின் வெற்றி இப்போது நமக்குக் கிடைத்த அளவுகளைச் சார்ந்தே உள்ளது.
இது தொடர்பாக, இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தனது பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ததைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் (suo moto W.P. (சிவில்) 2021 ஆம் ஆண்டின்) மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தடுப்பூசி சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அந்தந்த மாநிலத்தின் 18-44 வயதுக்கு இடைப்பட்ட மக்கள்தொகையின் விகிதத்தில் மாநிலங்களுக்குக் கிடைக்கக்கூடிய தடுப்பூசி அளவை ஒதுக்கியுள்ளதாகச் சமர்ப்பித்துள்ளது.
இருப்பினும், தமிழகம் அதன் மக்கள்தொகை அளவிற்கு ஏற்ப தடுப்பூசிகளைப் பெறவில்லை, இதன் விளைவாகத் தடுப்பூசியில் தற்போதைய கடுமையான பற்றாக்குறை ஏற்படுகிறது. தமிழகத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கை ஆயிரம் மக்களுக்கு 302 மட்டுமே. குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு முறையே 533, 493 மற்றும் 446 என்ற அளவில் கிடைக்கக்கூடிய தடுப்பூசி அளவுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு.
எனவே, தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் மேற்கண்ட ஏற்றத்தாழ்வைச் சரிசெய்து, 1 கோடி தடுப்பூசி அளவுகளில் சிறப்பு ஒதுக்கீடு செய்ய உங்கள் உடனடி தனிப்பட்ட தலையீட்டை மீண்டும் கோருகிறேன். இதனால் நாங்கள் திட்டமிட்ட இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு மிகக் குறைந்த காலகட்டத்தில் தடுப்பூசி போட முடியும்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.