Published : 13 Jul 2021 12:00 PM
Last Updated : 13 Jul 2021 12:00 PM

தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்: டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர நாமே காரணமா? தடுப்பது எப்படி?

சென்னை

மற்ற எந்த கொசுக்களுக்கும் இல்லாத ஒரு தன்மை டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களுக்கு உண்டு. இவை கடிப்பதால் உருவாகும் டெங்கு காய்ச்சல் குறித்து சிறிது தாமதமாக அறிந்தால் உயிரைப் பறிக்கும் நோயாக மாறிவிடும். இத்தகைய கொசுக்களை நம்முடைய அலட்சியத்தால் வளர்க்கிறோம் என்றால் அது மிகையல்ல.

கரோனா முதல் அலை, இரண்டாம் அலை தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதையும் புரட்டிப்போட்டு விட்டது. கரோனா அலை பரவல் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதும், பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியதும், பொருளாதார நசிவு ஏற்பட்டதும், இழக்கக்கூடாத மதிப்புமிகு உயிர்களை இழந்ததும் தொடர்கதையானது.

தற்போது ஊரடங்கு, தடுப்பூசி, கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டாம் அலை முழுதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்ற தகவல் நிபுணர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்தப் பேரழிவு நோய் தாக்கத்தில் பொதுமக்கள் குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னை வாழ் மக்கள் மறந்துபோன விஷயம் டெங்கு காய்ச்சல்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், ஜூன், ஜூலை மாதங்களில் அதிக தாக்கத்தை விளைவிக்கும் டெங்கு காய்ச்சல் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்துவரும் நோயாக உள்ளது. அதைவிட அதிக எண்ணிக்கையில் கரோனா தாக்கம் இருந்ததால் பெரிய கோடு இன்னொரு பெரிய கோட்டைச் சிறியதாக்கி விட்டது. டெங்கு காய்ச்சல் வருவதைத் தடுக்க மாநகராட்சி, அரசு சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு முழுவதும் தமிழகத்தில் 2,410 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் தற்போதுவரை 2,090 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல் டெங்கு பரவலின் வேகத்தைக் காட்டுகிறது.

பகலில் கடிக்கும், நன்னீரில் வளரும் டெங்கு கொசுக்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே. தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் விடுமுறை காரணமாக, வீட்டிலேயே ஒரு அறைக்குள் முடங்கி ஆன்லைன் வகுப்பு எனப் பல மணி நேரம் ஒரே இடத்தில் இருக்கும் குழந்தைகள் ஏடிஸ் வகை கொசுக்கடி தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. வீட்டில், வீட்டைச் சுற்றி கிடக்கும் பொருட்களில் தேங்கும் மழை நீர், நாம் பயன்படுத்தும் தண்ணீர் தேங்கிக் கிடந்தால் அதில் இக்கொசுக்கள் எளிதாக உற்பத்தியாகி வளர்ந்துவிடும்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க, பரவாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. அமைச்சர்கள் நேரடியாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள். சென்னை மாநகராட்சி பிரத்யேகமாக இதற்கென பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, வீடுதோறும், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்யக் குழுக்கள் அமைத்துள்ளது.

டெங்கு பரப்பும் கொசுக்கள் வளரும் சூழ்நிலையுடன் இருக்கும் கட்டிடங்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை அபராதம் என அறிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் பல தகவல்கள் கொண்டு செல்லப்பட்டாலும் அது போதாது. மேலும் அதிக அளவில் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

நாமே டெங்கு கொசுக்களை வளர்க்கிறோம்

டெங்கு கொசுக்கள் வளரும் சூழ்நிலையை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள். மழை நீர், சுத்தமான நீர் தேங்கும் இடங்களில்தான் டெங்கு கொசுக்கள் வளர்கின்றன என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியானால் மழை நீர் தேங்கும் இடங்களில் அவற்றைத் தேங்கும் வகையில் விட்டு வைப்பதும், ஏசி தண்ணீர் தேங்கும் இடம், பயன்பாட்டுக்காக அதிக நாட்கள் தண்ணீரைத் தேக்கி வைப்பது போன்ற காரணங்களால் தண்ணீரில் கொசுக்கள் வளர்கின்றன என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஒருவரிடம் கேட்டபோது, “அரசின் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் பொதுமக்களின் பங்களிப்பும் முக்கியம். நாம் வசிக்கும் பகுதி, வீட்டைச் சுற்றியுள்ள இடங்கள், மொட்டை மாடி, பயன்படுத்தப்படாத குடியிருப்பின் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் போட்டு வைத்திருக்கும் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பொருட்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

சுற்றுப்புறம் மட்டுமல்ல, மற்ற பகுதிகளிலும் கொசுக்களை உற்பத்தி செய்யும் காரணிகளைக் கண்டால் தாராளமாக மாநகராட்சி அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அதேபோன்று தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டில் குழந்தைகள் முடங்கிக் கிடப்பதாலும், ஆன்லைன் வகுப்பு போன்றவற்றில் அதிக நேரம் ஒரே இடத்தில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் வீடு, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் தூய்மையாக இருப்பதைப் பெற்றோரும் கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தடுப்பு மருந்து இல்லை, ஆனால் தடுக்கலாம்

டெங்கு காய்ச்சல் வருவதைத் தடுக்க தடுப்பு மருந்து இல்லை. ஆனால், டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்களை உற்பத்தியாகாமல் தடுக்கலாம். அதுவே டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மைக் காக்கும் முக்கிய நடவடிக்கை ஆகும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையும் தக்க நேரத்தில் உரிய மருத்துவமனையை அணுகுவதும் மிக அவசியமாகும்.

அறிகுறி என்ன?

சாதாரணக் காய்ச்சல் போன்று வரும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளைக் கண்டறிவது கடினம். சாதாரணமாக ஆரம்பிக்கும் காய்ச்சல் அதிகரித்துக் கொண்டிருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். டெங்குவைப் பரப்பும் கொசு கடித்த நான்கு முதல் 7 நாட்களுக்குள் அதிக காய்ச்சல் வெளிப்படும். டெங்கு காய்ச்சல் பொதுவாக 104 டிகிரி அளவைத் தாண்டிவிடும்.

இத்தகைய அதிக வெப்பநிலை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகளைச் சாப்பிடுவதைத் தவிர முழுமையாக ஓய்வு எடுப்பதும், திரவ உணவுகளை அதிகம் உட்கொள்வதும் இன்றியமையாதது. அவை டெங்குவை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும். ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

அதனால் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு ரத்த அணுக்களின் அளவு போதுமானதாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமானது. உடல் வலியும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிதான். ஆரம்பத்தில் மூட்டுகள், எலும்புப் பகுதிகளில் வலி அதிகமாக இருக்கும்.

நிலவேம்பு கசாயம் உயிர் காக்கும் ஒன்று

ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நேரத்திலேயே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி ரத்த அணுக்களை அதிகரிக்கும் இயற்கையான நிலவேம்பு சூரணத்தைக் காய்ச்சி கசாயமாக அருந்தலாம்.

வெறுமனே நிலவேம்புப் பொடியைக் காய்ச்சி கசாயமாக அருந்துவதால் பயனில்லை. இதற்கென தயாரிக்கப்படும் நிலவேம்பு சூரணம் சித்த வைத்திய மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவற்றை வாங்கி காய்ச்சிக் குடித்து வரவேண்டும்.

நிலவேம்பு கசாயமும், பாரம்பரிய சித்த மருத்துவமும்

நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் 64 வகையான காய்ச்சல்களை அன்றே பிரித்தறிந்து சிகிச்சை அளித்துள்ளனர். இன்றைக்கு உயிர்க்கொல்லியான டெங்கு பற்றிய புரிதல் இல்லாத காலத்திலேயே அதன் குறிகுணங்களை ஒத்த பித்த ஜுரங்களுக்கு மிக அதிக பயனாக அவர்கள் கொடுத்த நிலவேம்பு குடிநீர்தான் தற்போது டெங்குக்கான முதல் நிலை தேர்வாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

2006 -ல் பெரிய அளவில் வந்த சிக்குன் குனியாவுக்கும் நிலவேம்பு கசாயம் கட்டுப்படுத்தியதையும் நம் மாநில அரசும், மத்திய அரசும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியது.

நிலவேம்பு கசாயத்தை எப்படி அருந்துவது?

காய்ச்சல் வந்த அத்தனை நபர்களும் நிலவேம்புக் கசாயத்தை முதல் தேர்வாய் எடுக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் பெரியவர்கள் 50 மி.லி. இரு வேளை உணவுக்கு முன்னர் காலை, மாலை என ஐந்து நாட்களும், குழந்தைகள் மற்றும் சிறார்கள் (3 முதல் 12 வயதுக்கு உட்பட்டோர்) 15-30 மிலி அளவு அல்லது உடல் எடை மற்றும் பிற விஷயங்களை மருத்துவர்கள் மாற்றக்கூடும்.

அதேபோல் ரத்தத் தட்டுகள் (blood platelets level) குறையும் பட்சத்தில் அதைத் தடுக்க 1. ஆடாதொடைச்சாறு (15-30 மிலி வரை) ஆடா தொடை மணப்பாகு (5-10 மிலி வரை) 2. பப்பாளிச் சாறு (10-30 மிலி) கொடுக்கவேண்டும்.

தாழ் தட்டுகள் (very low blood platelets) சூழலிலும் தொடர்ந்து தட்டுகள் பின்னடையும் போதும் நவீன மருத்துவம் வழிகாட்டுதல் அவசியம். தட்டுகள் (blood platelets) நேரடியாக ஏற்றப்பட வேண்டும். அப்போது நவீன மருத்துவத்தை நாடவேண்டும், சில நேரம் IV Fluids அவசியப்படலாம். இச்சமயங்களில் சித்த மருத்துவரும், நவீன மருத்துவரும் இணைந்து செயலாற்ற வேண்டி இருக்கும்.

வெளியில் விற்கும் நிலவேம்புப் பொடியைப் பயன்படுத்தி கசாயம் தயாரிக்கலாமா?

கூடாது. நிலவேம்பு ஜுர சூரணம் என்ற பொடியைத் தகுதியான மருத்துவர்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது அங்கீகரிக்கப்பட்ட பொடியா என்று கவனித்து அதைத்தான் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். சாதாரணமாக நில வேம்புப் பொடியால் எந்த உபயோகமும் இல்லை.

அனைத்து மருந்தகங்களிலும் கிடைக்கிறது. இது தவிர இம்ப்காப்ஸ் என்ற நிறுவனம் மிஸ்டு கால் கொடுத்தால் வீடு தேடி கொண்டுவந்து கொடுக்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் பாதி விலையில் அதை சேவையாகக் கருதிக் கொடுக்கிறார்கள்.

சாதாரணமாக நில வேம்புக் கசாயத்தை உணவுக்கு முன்னர் அருந்த வேண்டும், அல்சர், காஸ்ட்ரிக் பிரச்சினை உள்ளவர்கள் உணவுக்குப் பின்னர் அருந்தலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x