

ஆட்டோ ஓட்டுநரின் ஐபோனைப் பிடுங்கி விசாரணை செய்ததால் ஆட்டோ ஓட்டுநர் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள், தலைமைக் காவலரைப் பணியிடை நீக்கம் செய்தனர்.
அயப்பாக்கம் பகுதிக்குட்பட்ட கிரீன் கார்டன் பகுதியில் உள்ள அம்பத்தூர் கூட்டுறவு நகர்ப் பகுதியில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநர் பாக்யராஜ் (32). நேற்று காலை 10.30 மணி அளவில் தனது வீட்டின் அருகில் தனது சக ஓட்டுநரான நண்பர் பிரதீப் (30) உடன் காலைக்கடன் கழிக்க ஆட்டோவில் சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருமுல்லைவாயல் காவல் நிலையத் தலைமைக் காவலர் சந்தோஷ், அவர்களை அழைத்து விசாரித்ததாகவும், பின்னர் அவர்கள் கையில் வைத்திருந்த ஐபோன், செல்போனைப் பறிமுதல் செய்துகொண்டு ஸ்டேஷனில் வந்து விவரங்களைக் கூறிப் பெற்றுக்கொள்ளவும் என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
தனது ஐபோனைத் திரும்பத் தரும்படி பாக்யராஜ் தலைமைக் காவலர் சந்தோஷைக் கேட்டு வாக்குவாதம் செய்ய, தரமுடியாது என சந்தோஷ் மறுக்க, தராவிட்டால் பாட்டிலை உடைத்து தற்கொலை செய்துகொள்வேன் என பாக்யராஜ் கூற, சந்தோஷ் அலட்சியம் காட்ட, ஆத்திரத்திலும், அவமானத்திலும் இருந்த பாக்யராஜ் அருகிலிருந்த பீர் பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துக்கொண்டார்.
உடனடியாக அவரைக் காப்பாற்ற அவரது நண்பர் பிரதீப், அவரை ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ரத்தப் பெருக்கு நிற்காததால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து பாக்யராஜின் உறவினர்கள் சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்காதவரை உடலை வாங்க மாட்டோம் எனப் போராட்டம் நடத்தினர்.
ஆட்டோ ஓட்டுநரின் தற்கொலை தொடர்பாக திருமுல்லைவாயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்தபோது உடனிருந்த பாக்யராஜின் நண்பர் பிரதீப்பிடம் விசாரணை நடத்தினர். பிரதீப், சந்தோஷிடம் அம்பத்தூர் துணை ஆணையர் விசாரணை நடத்தினார். ஆட்டோ ஓட்டுநர் பாக்யராஜ் கழுத்தை அறுத்துக்கொண்டபோது அவரைக் காப்பாற்றக்கூட சந்தோஷ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
துணை ஆணையர் நடத்திய விசாரணையை அடுத்து தலைமைக் காவலர் சந்தோஷைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.