

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.சுப்பையா பொறுப் பேற்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாகப் பணியாற்றிய நீதிபதி ஆர்.சுப்பையா கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
தமிழக அரசு உத்தரவு
இதையடுத்து நீதிபதி ஆர்.சுப்பையாவை, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நுகர்வோர் குறைதீர்ஆணையத்தின் தலைவராக ஜூலை 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் என மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பதிவாளர் இரா.மத்தேயூ தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஆர்.சுப்பையா, மறைந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்னவேல்பாண்டியனின் மகன். கடந்த 1959-ம் ஆண்டு பிறந்த நீதிபதி ஆர்.சுப்பையா, 1983-ம் ஆண்டு டிச.14-ம் தேதிவழக்கறிஞராகப் பதிவு செய்து, பல்வேறு துறைகளில் 23 ஆண்டுகள் வழக்கறிஞராகத் திறம்பட பணியாற்றியவர்.
நீதிபதியாக 13 ஆண்டுகள் பணி
சென்னை உயர் நீதிமன்றத்தில், 2008-ம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 63 ஆயிரத்து 420 வழக்குகள் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 81 ஆயிரத்து 33 வழக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 453 வழக்குகளுக்கு அவர் தீர்வு கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.