கும்பகோணத்தில் இன்று மகாமக தீர்த்தவாரி: 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

கும்பகோணத்தில் இன்று மகாமக தீர்த்தவாரி: 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு
Updated on
2 min read

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்று வரும் மகாமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரித் திருவிழா இன்று (பிப்ரவரி 22) நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பகோணத்தில் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து தினமும் மகாமகக் குளத்தில் பக்தர்கள் நீராடி வருகின்றனர்.

விழா தொடங்கியது முதல் நேற்று முற்பகல் வரை 9 நாட்களில் 30.80 லட்சம் பக்தர்கள் நீராடியுள்ளனர். தீர்த்தவாரிக்கு முதல் நாளான நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் நீராடிய வண்ணம் இருந்தனர்.

குளத்தில் டிஜிபி ஆய்வு

கும்பகோணத்தில் மகாமகத்தையொட்டி மேற்கொள் ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணி களை டிஜிபி அசோக்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குளத்தின் தெற்கு கரையில் அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையையும் அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, ஏடிஜிபி திரிபாதி, மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

காவல் துறை தலைவர் (தொழில்நுட்பம்) சாரங்கன் செய்தியாளர்களிடம் கூறியது: தீர்த்தவாரி நடைபெறும் நாளான பிப்ரவரி 22-ம் தேதி (இன்று) மட்டும் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பகோணம் நகரம் முழுவதும் 400 கேமராக்கள் வைக்கப் பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது என்றார்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் கூறியது:

கும்பகோணம் நகரில் பாது காப்பு ஏற்பாடுகள் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் கூட்டத்தைச் சமாளித்தல், வயதானவர்களுக்கு உதவுதல், போக்குவரத்தை சீர்செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களும் உரிய ஒத்துழைப்பு அளிக்கின்றனர் என்றார்.

மகாமகக் கோயில்களில் இன்று…

ஆதிகும்பேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், பாணபுரீஸ்வரர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள், அமிர்தகலசநாதர் கோயில்கள்:

மகா தீர்த்தவாரி, வெள்ளி வாகனத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடு- காலை 9, பஞ்சமூர்த்திகளுடன் மகாமக தீர்த்தவாரி- பகல் 12, மகாமகக் குளத்திலிருந்து விசேஷ அலங்காரத்துடன் கோயில் வந்து சேருதல்- இரவு 7.

ராஜகோபால சுவாமி கோயில்: மகாமக விழா- 9-ம் திருநாள், மகாமக தீர்த்தவாரிக்காக புறப்பாடு- காலை 8, தீர்த்தவாரி கண்டருளல் பகல் 12.

சக்கரபாணி சுவாமி கோயில்: 9-ம் திருநாள்,  சக்கரராஜா திருத்தேருக்கு புறப்பாடு, அதிகாலை 3.30, தேரோட்டம், அதிகாலை 4.

சாரங்கபாணி சுவாமி கோயில்: தேரோட்டம், காலை 7.15, காவிரியில் தீர்த்தவாரி கண்டருளல், பகல் 12.

ராம சுவாமி கோயில்: திருத்தேரில் எழுந்தருளல்- அதிகாலை 4, காவிரிக்கரை சாரங்கபாணி படித்துறையில் மகாமக தீர்த்தவாரி, பகல் 12.

3 சிவன் கோயில்களில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

கும்பகோணம் மகாமகப் பெருவிழாவின் 10 நாள் உற்சவத்தின் ஒரு பகுதியாக காசி விஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

மகாமகப் பெருவிழாவுடன் தொடர்புடைய 12 சிவன் கோயில்கள் மற்றும் 6 பெருமாள் கோயில்களில் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக நேற்று 3 சிவன் கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் காசிவிஸ்வநாதர் மற்றும் அபிமுகேஸ்வரர் கோயில்களின் தேர்கள் மகாமகக் குளக்கரையை வலம் வந்தன.

மகாமகப் பெருவிழாவில் நீராட வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இதில், நாகேஸ்வரர் கோயில் தேர், நிலைத் தேர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாமகப் பெருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்து கும்பகோணம் வந்திருந்த பக்தர்கள் சிலர் தேரோட்டத்தை போட்டோ, வீடியோ எடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in