Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

தமிழகத்தை பிரித்தால் கடும் போராட்டம் வெடிக்கும்: பழ.நெடுமாறன், கி.வீரமணி எச்சரிக்கை

சென்னை

தமிழகத்தைப் பிரித்தால் கடும் போராட்டம் வெடிக்கும் என்று தமிழர் தேசியமுன்னணி தலைவர் பழ.நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்னர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:

பழ.நெடுமாறன்: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது பற்றி மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இந்தமுயற்சி உண்மையாக இருக்குமானால், அதை எதிர்த்துத் தமிழர்கள் மிக கடுமையாகப் போராட வேண்டியசூழ்நிலை உருவாகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்சென்னை மாகாணம் என்ற கூண்டுக்குள் தமிழகம் அடைக்கப்பட்டுத் தவித்தது. 1956-ல்தான் தமிழகம் முதன்முதலாக ஒன்றுபட்ட மாநிலமாக ஆக்கப்பட்டது.

தமிழகத் தமிழர்களும், உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்துவரும் இந்த வேளையில், தமிழகத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று போராடாவிட்டால், நம்மையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது, நம்மை நம்பியிருக்கிற உலகத் தமிழர்களையும் காக்க முடியாது. தமிழகத்தைப் பிரிக்கும் செயல் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்து அனைவரும் போராடத் தயாராக வேண்டும்.

கி.வீரமணி: சட்டப்பேரவை தேர்தலில், கொங்கு மண்டலப் பகுதியில் அதிமுக கூட்டணிக்கு ஓரளவுஇடங்கள் கிடைத்துள்ளன. அதனால்,அதை வைத்து திமுகவை தடுத்துவிடலாம், பாஜகவை எப்படியாவது அங்குஇடம்பிடிக்க வைக்கலாம் என்ற அதீத கற்பனையில் ஈடுபட்டு, கொங்குநாடு சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

இந்த விஷம வித்தைகள், வியூகங்களில் ஈடுபடுவோருக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள். தமிழக மக்கள் இடையே சாதி வெறி, மத வெறியை தூண்டி வெற்றி பெறலாம் என்ற வீண் கனவு காண வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

இது பெரியார் மண். சூழ்ச்சிகளை, அரசியல் சூதாடிகளை அடையாளம் கண்டு தோலுரித்துக் காட்டி, விழிப்புணர்வு வெளிச்சத்தை காட்டும் திராவிடப் பொன்னாடு தமிழ்நாடு என்பதைஉணர்த்த ஒருபோதும் தயங்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x