

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினிக்கு அவர் தந்தை மரணத்துக்கு செல்வதற்கு 11 மணி நேரம் தான் பரோல் வழங்குவதா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டு கால ஆயுள் கைதியாக நளினி இருக்கிறார். இவர் தந்தை சங்கரநாராயணன் நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவாணபுரத்தில் 23-ம் தேதி உயிரிழந்தார்.
சங்கரநாராயணன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட போது, நளினி பரோல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், தமிழக அரசு பரோல் தரவில்லை. இந்த சூழலில், நளினியின் தந்தை 23-ம் தேதி மரணமடைந்த போது நளினி 3 நாட்கள் பரோல் கேட்டிருந்தார். ஆனால், தமிழக அரசு 11 மணி நேரம் மட்டுமே பரோல் அளித்தது. இது வேதனையளிக்கிறது. தந்தையை இழந்து வாடும் நளினிக்கும் அவரது குடும்பத்துக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.