

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் பரமசிவம். இவர் வெள்ளாளவிடுதி ஊராட்சி மன்றத் தலைவராகவும் உள்ளார். இவர், வெள்ளாளவிடுதி, மங்களாகோவிலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய விவகாரங்களில் தலையிடுவதால், நெல் கொள்முதல் பணி பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் உ.அரசப்பனிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அண்மையில் விவரம் கேட்ட அரசப்பனை, பரமசிவம் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பரமசிவம் மீது கந்தர்வக்கோட்டை போலீஸில் அரசப்பன் கடந்த வாரம் புகார் அளித்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, திமுக ஒன்றியச் செயலாளர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் நிர்வாகி ஆர்.கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஆர்.தர்மராஜன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் மு.மாதவன் முடித்து வைத்து பேசினார்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஒன்றியச் செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.