Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

எத்தனை பேர் பயணித்தனர் என்பதை அறிய அரசுப் பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் விநியோகம்

அரசு நகர பேருந்துகளில் பெண் களுக்கு நேற்று வழங்கப்பட்ட டிக்கெட்.

கோவை

எந்தெந்த வழித்தடத்தில், எத்தனைபேர் பயணித்தனர் என்பதை அறியசாதாரண அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு நேற்றுமுதல் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன், அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, ஆண் பயணிகளுக்கு மட்டுமே நடத்துநர்கள் டிக்கெட் கட்டணம் வசூலித்து வருகின்றனர். சிவப்பு நிற பேருந்துகள் தவிர, மற்ற நகர பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக் கொள்ளலாம். பெண்களுக்கு டிக்கெட் ஏதும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முதல் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக கோவை அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது, "எந்தெந்த வழித் தடத்தில், எத்தனை பேர் பயணித்தனர் என்பதை அறிய டிக்கெட் தரப்படுகிறது. அந்த டிக்கெட்டில்கட்டணம் ஏதும் குறிப்பிடப்பட்டிருக் காது. ‘மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு’ என்று மட்டும் குறிப் பிடப்பட்டிருக்கும். கோவையில் தற்போது 740 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில், 310 புறநகர்பேருந்துகள், 430 நகரப் பேருந்துகள். நகரப்பேருந்துகளில் 280 பேருந்துகள் சாதாரண கட்டணபேருந்துகள், 150 பேருந்துகள் சிவப்பு நிற சொகுசுப் பேருந்துகள். இதில், சாதாரண பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக் கலாம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x