

சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் விதமாக, அனைத்து பணிகளையும் தமிழக அரசு தொடங்கி உள்ளதாக திருப்பூரில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பொங்கலூரில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.2.25 லட்சம் மதிப்பிலான 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமை வகித்தார்.
ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழக அரசின் நடவடிக்கையால், திருப்பூர் மாவட்டத்தில் தொற்றின் தினசரி பாதிப்பு 150- க்கு கீழ் என்ற நிலை உருவாகியுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழக மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் விதமாக, அனைத்து பணிகளையும் தமிழக அரசு தொடங்கி உள்ளது. நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யக்கூடிய, சூழ்நிலை விரைவாக வர இருப்பதால், அதன்பிறகு அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
காங்கயம் அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்காக, தமிழ்நாடு ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட ரூ.1.18 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.