Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

சேலம் மாவட்டத்தில் இன்று 15,500 டோஸ் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை: ஈரோட்டில் இரவிலேயே மையங்களில் குவிந்த மக்கள்

சேலம் மாவட்டத்தில் இன்று (13-ம் தேதி) 138 மையங்கள் மூலம் 15 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் 22,640 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. இதையடுத்து, நேற்று மாவட்டத்தில் 138 மையங்கள் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.

ஒவ்வொரு மையத்துக்கும் குறைந்தபட்சம் 70 டோஸ் முதல் அதிகபட்சம் 400 டோஸ் வரை ஒதுக்கப்பட்டிருந்தது. அதேநேரம் தடுப்பூசி மையங்களில், மக்கள் ஏராளமானோர் வந்தனர். இதனால், முகாம் தொடங்கிய சிறிது நேரத்தில் தடுப்பூசி இருப்பு தீர்ந்தது.

இந்நிலையில், நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி 15 ஆயிரத்து 500 டோஸ் வந்தன. இவை மாவட்டத்தில் உள்ள 138 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்று (13-ம் தேதி) தடுப்பூசி மக்கள் செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி மையத்துக்கும் குறைந்தபட்சம் 40 டோஸ் முதல் அதிகபட்சம் 400 டோஸ் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தடுப்பூசிசெலுத்துவோர் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.62 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 4-ம் தேதி முதல், ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த 7, 8-ம் தேதிகளில், கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாம் டோஸ் மட்டும் பொதுமக்களுக்கு போடப்பட்டது.

நேற்று முன் தினம் இரவு தடுப்பூசி மருந்து வந்ததையடுத்து, 8 நாட்களுக்குப்பிறகு நேற்று 111 தடுப்பூசி மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். பல இடங்களில் கற்கள், காலணி, துடைப்பம் உள்ளிட்டவற்றைக் கொண்டு வரிசையில் இடம் பிடித்தனர். நேற்று மொத்தம் 16 ஆயிரத்து 940 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாநகராட்சியில் இன்று 20 மையங்களில் 2,000 டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் அரசின் உத்தரவின்படி கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x