வெங்கம்பாக்கத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க தடையில்லா சான்று வேண்டும்: ஆட்சியரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மனு

வெங்கம்பாக்கத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க தடையில்லா சான்று வேண்டும்: ஆட்சியரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மனு

Published on

புதிய வகுப்பறைகள் கட்ட, சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிப்பதற்கு தடையில்லா சான்று கோரி வெங்கபாக்கம் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத்திடம் மனு அளிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், வெங்கம்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. உயர்நிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, இப்பள்ளியில் 2021-22-ம் கல்வி ஆண்டில் 883 மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகளுக்கான தேவை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஊர் மக்கள் சார்பில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை அணுகியபோது அதன் நிர்வாகத்தினரால் சமூக பொறுப்பு நிதியிலிருந்து 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டித் தர சம்மதம் தெரிவித்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டிய இடத்தில் உள்ள சிதிலமடைந்த ஓடு போட்ட 2 அறைகள் கொண்ட கட்டிடம், உரக்கிடங்கு, 2 வகுப்பு அறைகள் கொண்ட கட்டிடம் ஆகியவற்றை இடிக்கவும், கட்டிடம் கட்ட தடையில்லா சான்று கோரியும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை தடையில்லா சான்று கிடைக்கப் பெறாததால் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகள் தொடங்கப்படாமலேயே உள்ளன. பள்ளியில் அதிக அளவில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு இடப்பற்றாக்குறையை போக்கும் விதமாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு தடையில்லாச் சான்று அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் வெங்கபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in