

மதுரை மாநகராட்சி ஆணையர் தன்னை அவமதித்ததாகவும், இது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்போவதாகவும் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ரூ.15,000 ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். பணியிலிருந்தபோது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்துக்கு வந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க, அதன் தலைவர் வெங்கடேசன்
மதுரை வந்திருந்தார். அப்போது, மாநகராட்சி வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துவதை அறிந்து, அவர்களிடம் குறைகளை கேட்க வந்தார். பின்னர், பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த போராட்டம் நடந்த இடத்துக்கு வருமாறு மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயனை அழைத்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஆணையாளர், கூட்டரங்கில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தெரிவித்தார். இதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தை மாநகராட்சி ஆணையாளர் அவமதித்ததாகக் கூறி, தூய்மைப் பணியாளர்களோடு இணைந்து தேசிய ஆணையத் தலைவர் வெங்கடேசன் தர்ணா செய்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், தூய்மைப் பணியாளர்கள் தேசிய ஆணையத்தை அவமதித்து விட்டார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவரிடமும், தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளரிடமும் புகார் அளிக்கவுள்ளேன். மதுரை மாநகராட்சியில் பணியின்போது பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு எந்தவித உதவியும் மாநகராட்சி செய்யவில்லை. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து போராட்டம் நடந்த இடத்துக்கு வந்த மாநகராட்சி ஆணையாளர், ஆணையத் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. ஆணையர் கார்த்திகேயன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பிறகு சிறிது நேரத்துக்குப் பின் பேச்சுவார்த்தைக் கூட்டம், மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது. இதில், ஆணையாளர், ஆணையத் தலைவர், தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையாளர் உறுதியளித்தார். இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
மாநகராட்சி ஆணையாளர் மறுப்பு
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் கூறியதாவது:
பணியில் இருந்தபோது கையை இழந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஸ்டாலின் என்பவரை பார்த்து பேசுவதற்கு தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வருவதாகதான் நிகழ்ச்சி நிரல் இருந்தது. ஸ்டாலினின் வீடு விளாச்சேரியில் உள்ளது. எனவே, தேசிய ஆணையத் தலைவரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக திருநகரில் நானும், ஆட்சியரும் காத்திருந்தோம்.
இந்நிலையில் ஆணையத் தலைவர் அங்கு வராமல், போராட்டம் நடந்த இடத்துக்குச் சென்றுவிட்டார்.
இதையறிந்த பின்பு நான் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தேன். பின்னர், அவரிடம் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கையை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கூட்டரங்குக்கு வருமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் வந்தார். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளேன்.
மேலும், காயமடைந்த பணியாளர் ஸ்டாலினுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாட்டையும், அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும் மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தற்காலிகப் பணி வழங்கியுள்ளோம். ஆணையத் தலைவரை நான் அவமதிக்கவில்லை என்று கூறினார்.