Published : 11 Feb 2016 05:54 PM
Last Updated : 11 Feb 2016 05:54 PM

மக்கள் நலக் கூட்டணியால் அதிமுக, திமுகவுக்கு அச்சம்: கருணாநிதிக்கு ஜி.ராமகிருஷ்ணன் பதிலடி

அதிமுகவை விமர்சிக்க மார்க்சிஸ்ட் ஒருபோதும் தயங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால் திமுகவை விடவும் அதிமுகவை மார்க்சிஸ்ட் தான் கடுமையாக விமர்சித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிமுகவை நேரடியாக விமர்சிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அச்சம்’’ என தெரிவித்துள்ளார். ஆனால், அவரே தனது அறிக்கையில், ‘‘அதிமுகவை விமர்சிக்கும் அதே நேரத்தில் திமுக ஆட்சியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளர் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்’’ என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அதிமுகவை விமர்சிக்க மார்க்சிஸ்ட் கட்சிக்கு அச்சம் இல்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அதிமுகவை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால், திமுகதான் இன்றைக்கு எந்தக் கட்சியுடன் கூட்டணி என முடிவு செய்ய முடியாத நிலையில், அதிமுகவை தவிர வேறு எந்தக் கட்சியையும் விமர்சிக்காமல் கூச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜகவைகூட நேரடியாக திமுகவால் குறை கூற முடியவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவை மிக மோசமாக அவமானப்படுத்திய காங்கிரசையும் கடிந்து கொள்ள முடியவில்லை.

அதிமுக, திமுகவுடன் மாறிமாறி கூட்டணியில் இருந்தபோது குறை சொல்லாதது ஏன் என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் அதிமுகவுக்கும் அவர் வக்காலத்து வாங்கியுள்ளார். மதுபான கொள்முதல் தொடங்கி பல்வேறு விஷயங்களில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு இதன் மூலம் உண்மையாகிறது.

இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த காலத்தில்கூட தவறுகளை சுட்டிக்காட்டவும், தேவைப்பட்டபோது வீதிக்கு வந்து போராடவும் மார்க்சிஸ்ட் தயங்கியதில்லை என்பதை கருணாநிதி அறிவார்.

சமூக ஒடுக்குமுறைக்கு துணை போகிற அல்லது சமரசம் செய்து கொள்கிற பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு வேண்டாம் என மார்க்சிஸ்ட் முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் உருவானதுதான் மக்கள் நலக் கூட்டணி. இது இரு துருவ அரசியல் நடத்தி வந்த அதிமுக, திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உண்மை.

அதிமுகவை விமர்சிக்க மார்க்சிஸ்ட் ஒருபோதும் தயங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால் திமுகவை விடவும் அதிமுகவை மார்க்சிஸ்ட் தான் கடுமையாக விமர்சித்து வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தபோது உடனடியாக அதனை மார்க்சிஸ்ட் வரவேற்றது. ஆனால், கருனாநிதி தொடக்கத்தில் கருத்து கூற ஒன்றும் இல்லை என்றார்.

கனிம வளக் கொள்ளை குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கூறுகிறது. இதுபோல திமுகவால் கூற முடியுமா? செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதா ராஜிநாமா செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கூறியது. திமுக அதுபோல கோரவில்லை.

திமுக மீது மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளருக்கு என்னவோ கோபம் என கருணாநிதி கூறியிருக்கிறார். எங்கள் கட்சியைப் பொறுத்தவரை தனிப்பட்ட தலைவர்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. கட்சியின் முடிவைத் தான் மாநிலச் செயலாளர் பேச முடியும். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளராக என்.சங்கரய்யா இருந்தபோதும் திமுக இப்படித்தான் கூறியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை தனிப்பட்ட கோபங்களின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. கொள்கை அடிப்படையிலேயே முடிவு எடுக்கிறோம்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x